Advertisement

Responsive Advertisement

அரச அதிகாரிகளை சமூக வலைத்தளங்களில் கண்டபடி விமர்சிப்பது மலிந்துபோயுள்ளது: மட்டு அரச அதிபர்

அரச அதிகாரிகள் பற்றிய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் எழுதுவது, முகப்புத்தகங்களில் எழுதுவதும் விமர்சங்களைச் செய்வதும் நோட்டிஸ் அடிப்பதுமான செயற்பாடுகள் இந்த மாவட்டத்தில் தற்போது மலிந்திருக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று பகல் நடைபெற்ற வாகரைப் பிரதேச கடல்நீரேரியையும் தாவரங்களயும் பாதுகாக்கும் பாடசாலை மட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேச கடல்நீரேரியையும் தாவரங்களயும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலில் கரையோரம் பேணல், கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுசரணையில் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,
கடல் சார்ந்த வளங்களையும், கடல்நீரேரிகளையும், இலங்கையிலே மிக நீளமான வாவியையும் கொண்ட மாவட்ட மாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது.
இந்த நீளமான வாவியின் ஊடாக நாங்கள் பெற்றுக் கொள்கின்ற நல்ல விடயங்களும், நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால்களும் மக்களுடைள வாழ்வியலிலே தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த வகையிலேதான் இலங்கையின் மலை நாடுகளில் பெய்கின்ற பாரிய மழை நீர் கடைசியாக இங்கு வந்து சேருகின்ற போது இந்த மாவட்டம் ஒரு நீரேந்தும் பகுதியாக மாறுகின்ற காட்சிகளை நாங்கள் அடிக்கடி காண்கின்றோம்.
இதனூடாக இழந்து போகின்ற சொத்துக்கள். சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் கடந்து போகின்ற பிரதேசமாக மட்டக்களப்பு இருக்கின்றமையும் தான் அதிகம் அழிந்து போகின்ற விடயங்கள். சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள், அதை விடவும் வருடாவருடம் நாங்கள் எதிர்நோக்குகின்ற வரட்சி. இத்தகைய காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கின்றவர்களாக இந்த மாவட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவையெல்லாம் எங்களுடைய இருப்பை மாத்திரமல்ல இயற்கை வளங்களின் இருப்பையும் கேள்விக் குறியாக்குகின்ற விடயங்களாகும். இதிலே இதுவரை காலமும் இயற்றை, சூழல் சம்பந்தமான கருத்துக்கள் குறைவடைந்து காணப்பட்டு போதும் இன்று உலகம் எதிர் நோக்குகின்ற சவால்கள் ஊடாக உலக நாடுகள் அனைத்தும் இயற்கைச் சமநிலையைப் பேணுவதில் மிக அக்கறையாக இருக்கின்றன.
அதன் ஊடாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையினால் கெய்ற்றோ உடன் படிக்கை ஏற்படுத்தப்பட்டு அமெரிக்கா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா தவிர அனைத்து நாடுகளும் கையொப்பமிட்டு அதன் படி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
கையொப்பமிடாத நாடுகள் தாங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகள் என்ற ரீதியில் சூழலையும், சூழல் சமநிலையையும் பேணத் தவறிக் கொண்டிருக்கின்ற ஒரு ஆபத்தான் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இதை அந்த நாட்டு மக்களும் சமூகமும் உணர ண்டியவர்களாக இருக்கிறார்கள். கிளின்ரன் ஜனாதிபதிக் காலம் முடிந்த பின்பு அவருடன் உப ஜனாதிபதியாக இருந்த அல்ரோ இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, கெய்றோ உடன்படிக்கையில் அமெரிக்கா கையொப்பமிட வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு படுதோல்வியைக் கண்டார்.
எனவே இத்தகைய ஏகாதிபத்திய நாடுகள் இயற்கையைப் புறக்கணித்து விட்டு ஏழ்மையான நாடுகளிடம் மட்டும் இயற்கையைப் பேணும் படி கேட்டுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், மாவட்டத்தில் இருக்கின்ற மிகப் பின்தங்கிய பிரதேசத்தில் இருக்கின்ற இந்த மக்கள் தங்களுடைய வாவியைப் பாதுகாக்கின்ற கருத்தியலில் ஒன்றிணைந்து இருக்கின்றமையானது பாராட்டத்தக்கது.
இந்த மாணவர்களும் அவர்களுடைய செயற்பாடுகள் மூலம் அவர்கள் இயற்கையை தங்களது தலையிலே சுமந்து பாதுகாப்பார்கள் என்பது குறித்து நிற்கின்றது. தென்னாபிரிக்காவின் பேருவில் தான் உலகின் காலநிலை சம்பந்தமான கணிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது.
அதாவது லாலினோ, எல்லினோ என்கிற இரண்டு விடங்கள். லாலிளோ அறிக்கையிடப்பட்டால் அந்த வருடத்தில் பாரிய வெள்ளம் ஏற்படும். எல்லினோ அறிக்கையிடப்பட்டால் பாரிய வரட்சி ஏற்படும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எல்லினோ அறிக்கையிடப்பட்டிருக்கிறது.
தென்னாபிரிக்காவின் அமேசன் காடுகள் மூலமாகத்தான் இந்த நிலைமை ஆய்வுக்குட்பதுத்தப்படுகின்றது. அந்த வகையில் அமேசன் காடுகள் அழிக்கப்பட்டால் உலகமே அழிந்து போகும் என்று தற்போது தகவல்கள் வெளியிடப்படுகின்றது.
எனவே நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மரத்தை வெட்டுவதற்கு எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. ஒரு மரத்தை வெட்டுவதற்காக விண்ணப்பிப்பவர். வாழ்நாளில் எத்தனை மரங்களை நாட்டிருக்கிறார் என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே தான் பாரிய பொறுப்பைச் சுமந்திருக்கின்ற திணைக்களங்களாக கரையோரம் பேணல் திணைக்களம், பிரதேச சபை, பிரதேச செயலாளர்கள் பாரிய பொறுப்புடையவர்கள். விசேடமாக பிரதேச செயலாளர்களுக்கு இலங்கை 13வது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.
பிரதேச செயலாளர்கள் தான் காணி தொடர்பான முடிவுகளை மேற்கொள்கின்றார்கள், மரங்கள் வெட்டுகின்றமை தொடர்பில் அனுமதி வழங்குகின்றார்கள். மணல் தோண்டுவது, கல் தோண்டுவது சம்பந்தமான அனுமதிப் பத்திரங்களை வழங்குகின்றார்கள். எனவே இந்த விடயங்களில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது.
இந்தக் காணி வழங்குதல் சட்டம், மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் எல்லாம் அரசாங்க அதிபரால் மேற்கொள்வதாக, சட்ட ரீதியாக அரசியலமைப்பு ரீதியாக, நிருவாக ரீதியாகவும் பிரதேச செயலாளர்களுக்கே இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலாளருக்கோ, மாவட்ட செலயகத்திற்கோ எங்களது நிருவாகத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை. நாங்கள் இந்த விடயத்தினைச் செய்வதுமில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இதனைப் பொறுப்புடைய உத்தியோகத்தர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்காமல் தங்களுடைய அதிகாரத்துக்குள்ளே மக்களுக்கு நீதியான, நியாயமான சேவைகளைச் செய்ய வேண்டும்.
இவைகளை வைத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் எழுதுவது, முகப்புத்தகங்களில் எழுதுவதும் விமர்சங்களைச் செய்வதும் நோட்டிஸ் அடிப்பதுமான செயற்பாடுகள் இந்த மாவட்டத்தில் தற்போது மலிந்திருக்கின்றன.
எனவே இவைகளுக்கெல்லாம் பயந்து அரச அதிகாரிகளாக நாங்கள் வேலை செய்ய முடியாது. இந்த மக்களுக்குச் சரியானதை மட்டும் செய்வதற்குத்தான் நாங்கள் அரச அதிகாரிகளாக இருக்கின்றோம். எனவே பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்றவர்கள் நேரடியாக வரவேண்டும்.
ஒழிந்திருந்து கோழைத்தனமாகத் தாக்க முயன்று ஏழை மக்களை அவர்களை மடையர்களாக, முட்டாள்களாக ஆக்குகின்ற செயற்பாடுகளை விட்டு திறந்த மனதோடு வெளிப்படைத் தன்மையோடு அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments