Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கூடும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இக்கூட்டமானது தமிழ் மக்களுக்கான அதிகாரப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முஸ்தீபு தென்படுகின்ற நிலையிலும், வடக்குக் கிழக்கிற்கான அதிகாரப் பங்கீடு தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கை தயாரித்து வழங்கவுள்ள நிலையிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருவதற்கான சாதகமான சூழல் உள்ள நிலையிலும், நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர (உ/த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராகவுள்ள நிலையிலும் இரண்டு தமிழர்கள் மாகாண அமைச்சர்களாகவும், இரண்டு தமிழர்கள் எம்.பி க்களாகவும், ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் உள்ள நிலையிலும் இக் கூட்டம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமலுள்ள பிரச்சினைகளான மீள்குடியேற்றம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பட்ட பல விடயங்கள், கால்நடைகள் தொடர்பான பிரச்சினைகள், சட்ட விரோத மீன்பிடி, காட்டு யானைகளின் தொல்லை, வைத்தியசாலைகளின் குறைபாடுகள், மோட்டார் வாகன மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்சினை, புதிதாக மதுபான சாலைகளை திறப்பதற்கான அனுமதி வழங்கல், நீர்ப்பாசன பிரச்சினைகள், உரமானிய விநியோக குளறுபடிகள், நெல் கொள்வனவு விடயம், வெள்ளப்பாதிப்பு என்பன போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்படுமா இக் கூட்டத்தில்? என்பது பல தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.
அரசியல் பலம் இல்லாமல் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று இரா. துரைரெட்ணம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments