கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்திற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி போதாமையினால் கலை, கலாச்சார நிகழ்வுகளை சிறப்பாக நடாத்த முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இறக்காமம் பிரதேசத்தில் கல்வி, கலை, கலாசார, சமய, சமூகப்பணிகளில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் துறைசார்ந்த பிரமுகர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,
"நவீன உலகத்திற்கு ஏற்ப நமது மக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நமது இனம் சார்ந்த தனித்துவமான பாரம்பரிய கலை, கலாச்சார, மத அடையாளங்களை பேணிப்பாதுகாத்து நமது எதிர்கால சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியுள்ளது.
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் ஒவ்வொரு இன மக்களும் தமக்கென தனியான கலாசார பாரம்பரியத்துடன் வாழ்ந்து வரும் நிலையில்தான்; இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும், நிரந்தரமான ஒற்றுமையும் ஏற்பட வாய்ப்புக்கள் உருவாகின்றது.
எனினும் கிழக்கு மாகாண சபையின் கலாச்சார திணைக்களத்திற்கு வருடா வருடம் ஒதுக்கப்படும் சிறு தொகை நிதியினை கொண்டு இந்த மாகாணத்தில் வாழும் மூவின மக்களினதும் கலை, இலக்கிய, கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளை சிறந்த முறையில் நடாத்த முடியாமல் பிரதேச செயலாளர்களும், கலாச்சார உத்தியோகத்தர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நிலமையை கருத்தில் கொண்டு கடந்த மாதம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் இது தொடர்பான தனிநபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்தேன். அதன் பயனாக எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண காலாசார திணைக்களத்திற்கு கூடிய நிதியினை ஒதுக்குவதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மாணித்துள்ளது. மாகாண கல்வி, கல்வி அமைச்சரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
அதேவேளை எதிர்காலத்தில் நமது பிரதேசங்களின் கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஒத்துழைப்புகளை நமது சமூகத்தில் வாழும் செல்வந்தர்களும் முக்கிய பிரமுகர்களும் வழங்க முன்வர வேண்டும்" என்றார்


0 Comments