வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் அனைத்து கடலோர பகுதிகளிலும் இன்று கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடலோரங்களில் இடி, மின்னலுடன் அதிக மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும், அனைத்து மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை மாற்றத்தினால் சென்னை நகர் மற்றும் அதனை சூழைவுள்ள பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பெய்த கடும் மழையுடன் கூடிய வானிலையினால் சென்னை விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சென்னையிலிருந்து புறப்படவிருந்த பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கட்டுநாயக்கவிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கவிருந்த 7 விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 7.20இல் இருந்து மாலை 6.35 வரையான கால எல்லைக்குள் சென்னை நோக்கி பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் பிற்பகல் 1.45 முதல் இரவு 10.15 வரையான காலப்பகுதியில் சென்னையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணிக்கவிருந்த விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments