2014, 2015இல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவாசாயிகளுக்கான பெரும் போக மானிய உர காப்புறுதி மூலமாக கிடைக்கப் பெற்ற நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவானது பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை.
இதனால் மட்டக்களப்பு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன் கிழமை வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்திற்கு முன்பாக பிரதேச விவசாயிகள் கவன ஈர்ப்பு போராடடம் ஒன்றினை மேற்கொண்டனர்.
குறித்த கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவசாயிகள் 1700 பேர் நஷ்ட ஈடு தொடர்பாக விண்ணப்பித்த போதிலும் 146 பேருக்கான கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 932 பேருக்கான கொடுப்பனவு ரூபா 2 கோடியே 47 இலட்சத்து 43660 தற்போது காசோலை மூலமாகவும் உரியவர்களுடைய வங்கி கணக்கிற்கும் வைப்பிலிட்டும் வழங்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமலநல கேந்திர நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எம்.ஏ.றசீட் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பாக மேன்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் பரிசீலனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தகவல் மேற்படி காப்புறுதி சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி காப்புறுதி தொகையினை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை, கமநல அபிவிருத்தி திணைக்களங்கள் இணைந்து கடந்த வாரம் முதல் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் கவன ஈர்ப்பு போராட்டத்தினை 24 கண்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புக்ள் மற்றும் கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.



0 Comments