கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயகவின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என கிழக்கு மாகாண சபையின் தவிசாளரான சந்திரதாஸ கலப்பதி தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பகட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது சுமூகமான சூழ்நிலை நிலவினாலும் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூவின மக்களும் வாழும் பிரதேசம் என்பதை கவனத்திற்கொண்டு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும். அதாவது எதிர்பாரத சில நிகழ்வுகளால் மாகாண சபை உறுப்பினர்கள் தனிமைப்பட வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
மாகாண உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த பொலிஸார் எவ்வித முன்அறிவித்தலும் இன்றி விலக்கப்பட்டுள்ளார்கள். இது தொட்ர்பாக பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருடன் தொடர்புகொண்டு எழுதது மூலமான கோரிக்கையொன்றை முன்வைத்து விலக்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை மீளப்பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும்” என்றார்


0 Comments