பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும இடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டிருக்கின்றது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி இருப்பதாகவே தெரிகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்படப் போவதாக தெரிந்ததையடுத்து இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலையே இடம்பெற்றது என்றும் இதுகுறித்து சர்வதேச விசாரணை இன்றியமையாதது எனவும் வலியுறுத்தி வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சமர்ப்பித்து நிறைவேற்றியிருந்தார்.
இலங்கை வந்திருந்த தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினரை சந்தித்து பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஐ.நா.விசாரணை அறிக்கை செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்படும் என்ற கருத்தினை அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே வடமாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வேளையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன வடபகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இனப்படுகொலை தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சாடி பேசியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தான் சந்தித்து பேசியதாகவும் இதன்போது அவர் தெரிவித்த கருத்துக்களை நிறைவேற்றவில்லை என்றும் மாமனான ரணில் கூறியதையே மருமகனான ருவான் விஜயவர்தன யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளதாகவும் விக்னேஸ்வரன் சாடியிருந்தார். இந்த விவகாரமானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோபமடையச் செய்திருந்தது.
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து குருநாகலில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையினை ஒத்திவைத்ததன் மூலம் சர்வதேச சமூகம் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கன்னங்களில் அறைந்துள்ளதாகவும் இனப்படுகொலை தீர்மானம் இனவாதமானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிவந்த நிலையில் பிரதமர் ரணில் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்திருந்தார். இதில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவது இனவாதமாகாது. இனவாதத்தைப் பரப்புவது நானா அல்லது பிரதமரா என்று விக்னேஸ்வரன் அந்தப் பதிலில் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் தீர்வுக்கான திட்ட வரைவை எரியூட்டியது யார் என்ற கேள்வியையும் முதல்வர் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வியொன்றை வழங்கியிருந்தார். இந்தச் செவ்வியிலும் முதல்வர் விக்னேஸ்வரனை அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். விக்னேஸ்வரன் பொய் கூறுகின்றார். வடக்கில் இனப்படுகொலை இடம்பெற்றது என அவர் தெரிவித்திருப்பது பொறுப்பற்ற கருத்தாகும். இதனை அவர் வாபஸ் வாங்க வேண்டும். அதுவரை அவருடன் பேச நான் தயாரில்லை. நான் இம்மாதம் யாழ்ப்பாணம் செல்வேன். ஆனால் விக்னேஸ்வரனை சந்திக்க மாட்டேன். அவருடன் பேசவும் நான் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்துகின்ற, எந்தப் பிரச்சினையானாலும் அவருடனேயே பேசுவேன் என்று பிரதமர் ரணில் தெரிவித்திருக்கின்றார்.
பிரதமரின் இத்தகைய கருத்தானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை பெரும் தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கியுள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த முறுகல் நிலையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கவலையளிக்கும் விடயமாகவே அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அடிப்படைப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இந்தப் பேச்சுக்களின்எபோது விரிவாக ஆராயப்பட்டிருந்தது. இதனையடுத்தே பொது எதிரணி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்டு அரசியல் தீர்வைக் காணும் எண்ணத்துடனேயே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். தமது நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் கடந்த சுதந்திரதின வைபவத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த பங்கேற்பு தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன. லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது இவர்கள் இருவரதும் உருவப்படங்களும் எரியூட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றபோதிலும் கூட்டமைப்பின் தலைமையானது யதார்த்தபூர்வமான சிந்தனையுடன் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு தமது போக்கில் உறுதியாக இருப்பது புலனாகின்றது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைமை பயணிக்கும்போது வடமாகாண முதலமைச்சர் மாறுபட்ட விதத்தில் செயற்படுவதானது கூட்டமைப்பின் தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.
ஆனாலும் முதலமைச்சரின் செயற்பாடுகளையும் முற்றுமுழுதாக தவறென கூறமுடியாத சூழலும் காணப்படுகின்றது. ஆனால் கூட்டமைப்பின் தலைமை ஒருநிலைப்பாட்டிலும் வடமாகாண முதலமைச்சர் வேறொரு நிலைப்பாட்டிலும் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணித்தால் முரண்பாடுகளே மேலும் தலைதூக்கும். இந்தநிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்குமிடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலைக்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியமாக மாறியிருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமை கடுமையாக சிந்தித்து செயற்படவேண்டிய நிலை எழுந்திருக்கின்றது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்டே அரசியல் தீர்வொன்றை காணவேண்டும். இதற்கேற்றவகையில் கூட்டமைப்பின் தலைமையும் வடமாகாணசபை நிர்வாகமும் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும்.
இவ்வாறு அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான நிலைவரம் இருக்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதனை பகிஷ்கரிக்குமாறு தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் திருகோணமலையில் நடைபெற்ற காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குறைந்தளவானோரே சாட்சியங்களை அளித்திருந்தனர்.
இவ்விடயமும் கூட்டமைப்பின் தலைமையை அதிருப்திகொள்ளச் செய்துள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் விசாரணையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே சம்பந்தனின் கருத்து சரியானதாகும். ஆணைக்குழு மீது நம்பிக்கை இருக்கின்றதோ, இல்லையோ சாட்சியங்களை பதிவுசெய்து அதனை ஆவணமாக்க வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் பெருமளவானோர் சாட்சியமளித்தமையினால்தான் அதனைப் பின்பற்றி சர்வதேச விசாரணையொன்று நடைபெறும் சூழ்நிலை உருவானது. எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உதறித்தள்ளிவிட்டு பின்னர் யோசிப்பதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
இந்த விடயங்களில் சகல தரப்பும் சிந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
0 Comments