Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ் - முஸ்லிம் இன உறவுக்கு வழி என்ன? மு.கா. - கூட்டமைப்பு செய்யவேண்டியதென்ன?

யுத்த காலத்தில் தமிழ் - முஸ்லிம் உறவு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது, இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கான அடித்தளமாக கிழக்கு மாகாண சபை அமைய வேண்டும். நான் ஒரு முதலமைச்சர் என்ற அடிப்படையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு முதல்வர் ஹபீஸ் நஸீர் அகமட். 15.02.2015 அன்று வெளியான வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி அவர் என்ன கணிப்பீடு வைத்திருக்கிறாரோ தெரியாது. ஆனால் அவர் ஒரு உண்மையான முஸ்லீம் என்றும் இவ்வார்த்தைகள் குர்ஆன் மீது கை வைத்துச் சொல்லப்பட்டதாகவும் நாம் நம்புவோமாக.
இனங்களுக்கிடையிலான உறவுகள் என்பது எப்போதும் ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது. எதையாவது பெற்றுக் கொள்ளும் சமயத்தில் அல்லது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது நாமும் தமிழ் பேசும் மக்கள் என்று இங்குள்ள முஸ்லீம் கட்சிகள் கூறுகின்றன. அது மிகச் சரியானதே. ஆனால் தமிழருக்கு எதைத் தரக்கூடாது., ஏற்கனவே இருப்பவற்றில் எதனைப் பிடுங்கலாம் என்று சிங்களத் தரப்பு முயற்சிக்கையில் அந்தத் தரப்புடன் சேர்ந்து தமிழரின் முதுகில் குத்துகின்றன. இங்கு குறிப்பிடப்படும் விடயம் முஸ்லீம் கட்சிகளையேயன்றி (நல்லாட்சி இயக்கம் போன்றவை விதிவிலக்கு) சாதாரண முஸ்லீம் மக்களையல்ல.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவில் இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் முதலமைச்சர் பதவியைக் கூட முஸ்லீம் காங்கிரஸே ஏற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் கோரப்பட்டது. அதைப் புறந்தள்ளி மகிந்தவின் கரங்களைப் பற்றி நின்றார் ஹக்கீம். மீண்டும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த கூட்டமைப்பைப் புறந்தள்ளி மகிந்தவுக்கு ஆதரவளித்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இன உறவு பற்றி புது வியாக்கியானம் கொடுத்தார்.
சமாதான காலத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் முஸ்லீம் காங்கிரசினர் அரசு தரப்புப் பிரதிநிதிகளாகவே கலந்து கொண்டனர். இப் பேச்சுவார்த்தையின் இடையே புலிகள் தரப்பின் பிரதிநிதிகளோடு நடைபெற்ற உரையாடல்களில் 'நாங்களும் தமிழ் பேசுபவர்கள்தானே உங்கள் தரப்பிலும் நாங்கள் இடம்பெற வேண்டும்தானே' என்று கேட்டனர். அதற்கு அவர்கள் 'பிரச்சினையில்லை., நீங்கள் இந்தப் தரப்பிலும் இருந்து பேசுங்கள்., அந்தத் தரப்பிலும் இருந்து பேசுங்கள்.என்று கூறியிருந்தார்கள்,.
மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சியமைத்ததும் அவர்கள் செய்த முதல் காரியம் ஏற்கனவே 13ஆம் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சில அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததுதான். அப்போதெல்லாம் தாங்களும் தமிழ் பேசும் மக்கள் - இன உறவு என்பது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அது மட்டுமல்ல திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்த பிரதம நீதியரசர் ஷராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான நடவடிக்கையிலும் பங்கு கொண்டனர். இவையனைத்தும் நீதியமைச்சர் பதவியைக் கையில் வைத்துக்கொண்டு ஹக்கீம் செய்த வேலைகள். பஸில் எதிர்பார்த்த தீர்ப்பை வழங்கியிருந்தால் தங்கு தடையின்றி ஷராணியே பிரதம நீதியரசர். சில மனிதர்களால் பதவிகளுக்குப் பெருமை. ஆனால் ஹக்கீம் போன்றோர் வகித்ததால் நீதியமைச்சர் என்ற பதவிக்கு...?
சரி... இப்போது மீண்டும் கிழக்கின் முதல்வரின் விடயத்துக்கு வருவோம். முன்னர் முதலமைச்சர் பதவியைத் தருகிறோம், இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூட்டமைப்பு கோரியபோது அதைப் புறந்தள்ளியதிலும், திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கும் இவருக்கும் பங்குண்டு அல்லவா? இந்நிலையில் மேற்குறித்த கருத்து உண்மை முஸ்லீமின் கருத்தாக இருந்தால் முன்னர் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்கலாமே. இத்தீர்மானத்தை எடுத்தால் முஸ்லீம் மக்கள் மட்டுமன்றி இவரே எமது முதலமைச்சர் என்றும் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதல்வர் ஆசனம் கிடைக்கவில்லையென கவலைப்படவும் மாட்டார்கள்.

(சாணக்கியன்)
இறுதிப் போரில் இடம்பெற்றது இனப் படுகொலையே' என்ற தீர்மானத்தை கிழக்கின் முதல்வர் கொண்டு வரலாமே. வடக்கிலும் முதலமைச்சர்தான் இத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அங்குள்ள முஸ்லீம் காங்கிரஸ் மட்டுமல்ல, சிங்கள உறுப்பினர்கள் இருவருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. அப்படியானால் இவருக்கு மட்டும் ஏன் தயக்கம். கட்சி என்றால் ஒரே தீர்மானம் தானே. முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் வடக்கில் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்றால் இங்கேயும் அதேநிலை தானே. வார்த்தையில் உண்மையிருந்தால் கிழக்கின் முதல்வர் இந்தப் பணியை மேற்கொள்ளலாமே'. நான் ஒரு முதலமைச்சர் என்ற அடிப்படையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவேன்' என்ற கூற்றை அவர் மெய்ப்பிக்கட்டும். முதல்வர் பதவி சம்பந்தமாக இனி எந்தச் சச்சரவையும் மு.கா.விடம் வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களே ஆளட்டும் என்று பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கி கூட்டமைப்பின் தலைமைக்கு அனுப்புவதற்குத் தமிழ் மக்கள் தயாராகவுள்ளனர். இத்தீர்மானத்தைக் கொண்டு வந்து வரலாற்றில் இடம் பிடிக்கட்டும்.
இதேவேளை இவ்விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பினர் முஸ்லீம் காங்கிரஸுடன் பேச்சு நடத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் இதயசுத்தியுடன் வடக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்று அனைவரும் நம்பலாம். அரசல் புரசலாக உள்நாட்டுப் பொறிமுறைகளையும் வரவேற்கும் சுமந்திரன் போன்றோரின் கருத்துகளை விஞ்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என முடிவெடுக்கலாம். காலங் காலமாக நம்பி ஏமாந்தோம் என்ற பல்லவியே பாடும் பணியை நிறுத்திவிட்டுக் காரியமாற்ற முனைய வேண்டும். முதல்வர் மறுத்தால் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி இத்தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும். அத்துடன், உண்மையான இன உறவை நாடும் இஸ்லாமியச் சகோதரர்களின் கரங்களைப் பற்ற முயல வேண்டும். அண்மையில் தமிழரசுக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவை சேனாதிராசா, செயலர் இ.துரைராஜசிங்கம் ஆகியோருக்கு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வரவேற்பளிக்கப்பட்டபோது வாழ்த்துரைக்க முஸ்லீம் மதகுருமார் அழைக்கப்படவில்லை. இது வருந்தத்தக்க விடயம்.
சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின் குடியேற்றம் ஏன் தாமதமாகின்றது என்பது குறித்து மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த பத்திரிகைக்கு கட்டுரை எழுத ஒரு தமிழர் முஸ்லீம் பிரதேசங்களுக்குச் சென்றார். பல விடயங்களையும் அறிந்து கொண்ட அவர் இறுதியாக யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதற்கு எதிரே சேதமடைந்த கட்டிடங்களிலிருந்து வந்த சில முஸ்லீம்கள் அவரை விசாரித்தனர். அவரும் தனது நோக்கத்தைக் கூறினார். அப்போது அவர்கள் '31ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு கூட்டம் வருவீர்களா?' எனக் கேட்டனர். ஏதாவது புனர்நிர்மாணம், வீடமைப்பு சம்பந்தமான கூட்டமாக இருக்கும் எனக் கருதிய அவர் 'என்ன கூட்டம்?' என வினவினார். 'தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டம்' எனப் பதில் வந்தது. பத்திரிகையாளர் உறைந்து விட்டார்.
தமிழனான தானே தந்தை செல்வாவின் நினைவு நாளை மறந்து போயிருக்கையில் முஸ்லீம்கள் அதனை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் வடபுல முஸ்லீம்களின் வெளியேற்றம் முதலான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் அந்த மக்கள் மனதில் வாழ்கின்றார் தந்தை செல்வா என நினைக்கையில் அவருக்குக் கண்ணீர் பெருகியது.
முஸ்லீம்கள் கட்சி மாறினர், காட்டிக் கொடுத்தனர் என்று எழுந்தமானமாக கதைக்கும் பலருக்கு எம்மிடையே மார்ட்டின், அருளம்பலம், கருணா, கிஷேர், பிள்ளையான், டக்ளஸ், வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் நினைவுக்கு வருவதில்லையா? சரியான நபர்களை இனங்காணாதது நமது தவறேயொழிய வேறில்லை. தமிழரசுக் கட்சியின் பழைய உறுப்பினர் இமாம் போன்றோர் என்றும் நிலைப்பாடு மாறாதவர்களே. நேரடியாகவும், நல்லாட்சி இயக்கம் போன்ற சக்திகள் மூலமாகவும் முஸ்லீம்கள் மத்தியில் இறங்கி வேலை செய்தால் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற தரகர்களை நம்பியிருக்கத் தேவையில்லை. தந்தை செல்வா வளர்த்த கட்சி இதற்கு முன்வருமா?
இதற்கு முதற் கட்டமாக இது முஸ்லீம் கட்சிகளின் நிலைப்பாடுதானே தவிர முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு அல்ல என்று தமிழர்கள் மத்தியில் கூறும் நிலை வரவேண்டும்.
முஸ்லீம்களும் ஆயுதமேந்திப் போராடி வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்கள். இந்திய இராணுவ காலத்தில் போராட்டத்தைக் காத்ததில் அவர்களுக்கும் பெரும் பங்குண்டு. சுதுமலையில் கிட்டுவின் முகாம் உலங்கு வானூர்தியில் வந்த படையினரின் முற்றுகைக்குள்ளானபோது யாழ்நகரில் நிலை கொண்டிருந்த பாரூக் தலைமையிலான முஸ்லீம் போராளிகள் சுதுமலைக்கு விரைந்தனர். வழியில் வாகனங்கள் ஏதும் கிடைக்காதபோதும் ஆயுதங்களுடன் காலால் ஓடியே சுதுமலைக்குச் சென்றனர். இவர்கள் போவதற்கிடையில் சண்டை முடிந்தது என்பது வேறு விடயம். இதில் உணர்வுதான் முக்கியம். அந்தச் செயல் கிட்டுவை நெகிழ வைத்தது. எல்லோரும் தவறிழைத்து விட்டோம். இனிப் புண்களைக் கிளறிப் பார்ப்பதில் பயனில்லை. இதயசுத்தியுடன் செயற்பட்டால் கிழக்கின் முதல்வர் விடயம் பெரிதல்ல. அதேவேளை இன உறவு என்பது ஒரு வழிப் பாதையல்ல என்பதை கிழக்கின் முதல்வருக்கும் ஹக்கீமுக்கும் புரிய வைக்க யார் முயலப் போகிறார்கள்?

Post a Comment

0 Comments