Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவுக்கு ஆப்பு, இன்று முதல் தேசிய அரசாங்கம்!

இலங்கை அரசியலில் இன்று மாலை ஒரு பேரதிர்ச்சி இடம்பெற உள்ளது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரகசிய பேச்சுக்களின் பலன் இது என்று கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது.
இவர்களில் 15 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகவும், 15 பேர் பிரதி அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம் சுதந்திர கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் இப்பட்டியலில் இல்லை என்றும் இதன்படி எதிர்க் கட்சி தலைவர் நிமால் ஸ்ரீபால டீ சில்வா, எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஜோன் செனவிரட்ண, சுதந்திர கட்சி செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் அமைச்சர்களாக நியமனம் பெறவில்லை என்றும் தெரிய வருகின்றது.
இதே நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளை சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவி பெறுவோர் பட்டியலில் இல்லை என்றும் இச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாளை 23 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரிக்கின்றது.
தேசிய அரசாங்கம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை, நாடாளுமன்றம் ஏப்ரம் மாதம் கலைக்கப்படா விட்டால் வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சி பகிரங்கமாக தெரிவித்து வந்திருக்கின்ற நிலையில் இத்திடீர் மாற்றம் நேர்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார், இவருடன் ஓடிப் போகாமல் இருக்கவே சுதந்திர கட்சி எம். பிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்று வலுவாக சந்தேகிக்க வேண்டி உள்ளது.
எது எப்படி இருந்தாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன என்பது மாத்திரம் வெளிச்சமாக தெரிகின்றது.
மீண்டும் நீண்ட அமைச்சரவையே உருவாகின்றது. 100 நாள் வேலைத் திட்டம் இனி பேச்சளவில்தான். இன்னும் ஓரிரு வருடங்களுக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று புரிகின்றது.
இதே நேரம் நாடாளுமன்ற கலைப்பு மக்களுக்கு சொன்னபடி இடம்பெற வேண்டிய தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேசியாவில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments