3 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆதரித்த போது அதனை நிராகரித்தவர்களும் மக்களை உசுப்பேற்றும் தமது சுயலாப அரசியல் மூலமாக வடமாகாண சபையை கைப்பற்றியவர்களும் இதுவரையில் மக்களுக்கு எவ்விதமான அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார்கள் என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
“உண்மையான மாற்றம்” என்ற தொனிப்பொருளில் தொகுதிவாரியாக கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் தொடர்ச்சியாக ஊர்காவற்துறையில் நேற்றைய தினம் (21) இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தீவுப்பகுதிக்கும் பிரதான நிலப்பரப்பிற்கும் இடையிலான யாழ்.பண்ணை வீதி தற்போது மிகச்சிறப்பான முறையில் செப்பனிடப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இப்புனரமைப்புப் பணிகளை நாமே முன்னைய அரசுடனான இணக்க அரசியலின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் அதுதொடரப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
அக்காலப்பகுதியில் மத்திய அரசுடனான நல்லுறவின் ஊடாகவே எமது மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை நாம் முன்னெடுத்துள்ளோம் என்பதுடன் மாநில ஆட்சியையும் நாம் கைப்பற்றியிருந்திருப்போமேயானால் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்க முடியும்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது எமது இணக்க அரசியலை பின்பற்றுகின்ற நிலையில் மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டு அதனை ஆதரித்த போது அதனை நிராகரித்தவர்கள் இன்று அதனை ஏற்றுக் கொண்டு மக்களை உசுப்பேற்றும் அரசியல் மூலமாக வாக்குகளை அபகரித்து மாகாணசபையையும் கைப்பற்றியுள்ள நிலையில் இதுவரையில் மக்களுக்கு எவ்விதமான அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார்கள் என்பதை மக்கள் நன்குதெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கிடைக்கப்பெற்றுள்ள வடமாகாணசபை அதிகாரத்தை கூட்டமைப்பினர் சரியான முறையில் பயன்படுத்த தவறி வருகின்றனர் என்பதுடன், அதன் அதிகாரங்களை சரியான முறையில் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இன்று ஊர்காவற்துறை உள்ளிட்ட தீவகப்பகுதியில் கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளை எவ்விதமான இடர்பாடுகளுமின்றி மேற்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்றால் அது எமது இணக்க அரசியல் ஊடாக கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதமேயாகும்.
அந்தவகையில் எமது மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பது மட்டுமன்றி அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மென்மேலும் முன்னேற்றம் காண வேண்டுமென்பதுடன் தீவகப் பகுதியின் அபிவிருத்திக்காக மேலதிக விசேட நிதியொதுக்கீடுகள் பெற்றுக் கொண்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தினாலோ அல்லது துஸ்பிரயோகம் செய்தாலோ அவர்கள் மீது பொலிசார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், எமது கட்சியின் கொள்கை கொள்ளையோ கொலையோ அல்லவென்றும் மக்களுக்கு நிம்மதியான கௌரவான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதே முக்கிய நோக்காகுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது தொகுதி செயற்பாட்டாளர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் காந்தன், உபதவிசாளர் அல்பேட், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அங்கயற்கண்ணி ஆகியோரும் உடனிருந்தனர்.


0 Comments