Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தொடங்கியது வாக்களிப்பு! – நேரகாலத்துடன் வாக்களிக்குமாறு அழைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக் காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு பிற்பகல் 4 மணிவரை நடைபெறும். வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே சென்று தமது வாக்குகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள அட்டை மற்றும் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாயின் செல்லுபடியாகும். கடவுச் சீட்டினையும் உடன் எடுத்துச் செல்லப்பட வேண்டியது கட்டாயமெனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகூடிய வேட்பாளர்களான 19 பேர் இம்முறை போட்டியிடுகின்றனர். இவர்கள் 17 அரசியற்கட்சிகள் மற்றும் இரண்டு சயேச்சைக் குழுக்கள் சார்பில் களத்தில் இறங்கியுள்ளனர்.கடந்த 2014ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிற்கு அமைய இம்முறை ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களின் 160 தேர்தல் தொகுதிகளிலும் இன்று வாக்களிப் பினை நடாத்துவதற்காக 12 ஆயிரத்து 314 வாக்கெடுப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதேநேரம் இன்றைய தினம் பிற்பகல் 4 மணி முதல் நாடு முழுவதுமுள்ள ஆயிரத்து 419 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்காக 5 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் உட்பட 71 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதற்கு மேலதிகமாக உள்நாட்டு வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேற்று முதல் நாடுமுழுவதும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments