ஈழமணித் திருநாட்டிலே மங்கா மகிமைபெறு மன்னாரிலே நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே அமையப் பெற்ற வயலும், வயல் சார்ந்த நிலமுமான மருதநிலத்தால் அலங்கரிக்கப்பெற்ற முருங்கனிலே 1954ஆம் ஆண்டு மாசித் திங்கள், 24ஆம் நாள் செபஸ்தியான், செபமாலை தம்பதிகளின் ஒன்பது மக்கட் செல்வங்களில், கடைக்குட்டியாக உதித்தவரே எமது பெரும் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய அதிபர் அருட்சகோதரி மேரி எலிசபெத் ஆவார். பெற்றோராலும் சகோதர, சகோதரிகளாலும் மிகவும் அன்புட னும், பரிவுடனும் வளர்க்கப்பட்டார்.
கல்விச் செல்வம்
இவர் தனது ஆரம்பக் கல்வி முதல், க.பொ.த. சாதாரண தரம் வரை முருங்கன் மகாவித்தியாலயத்திலும், க.பொ.த உயர்தர வகுப்பை மட்டக்களப்பு, புனித சிசிலியா மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேர்ந்தார். கல்வி, கேள்வி, கலை ஞானம் விளையாட்டு போன்றவற்றில் மேம்பட்டுத் திகழ்ந்தார். இவரது கற்றல் சாதனையின் வெளிப்பாடு, இவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்விக்கான வாயிலைத் திறந்தது. கலைப்பீட மாணவியாய் கல்வியிலும், கலை ஈடுபாட்டிலும் தனது முத்திரையைப் பதித்தார். இறுதியில் இரண்டாம் வகுப்பு மேல்நிலைத்தரத்தில் தேறி, கலைப்பட்டதாரியானார். கல்விமீதான இவரது ஆர்வத்தினால் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பட்டமேற்படிப்பு டிப்ளோமா கற்று, திறமைச் சித்தியுடன் சான்றிதழைப் பெற்றார்.
உண்மைப் பொருளை உகந்த உள்ளம்
இரட்சகராம் இயேசுவை உள்ளத்தில் ஏற்று வாழ்ந்து வந்த இவர், முற்றுமுழுதாகவே ஆண்டவருக்கு அருட்பணி புரிய நாட்டம் கொண்டு முருங்கன் மகா வித்தியாலயத்தில் கற்கும்போதே, 1972இல் அப்போஸ்தலிக்க கார்மேல் சபையில் புனிதத்துவ துறவற வாழ்வை ஆரம்பிக்க இணைந்து கொண்ட இவர் 1976இல் முதல் வாக்குத்தத்தத்தையும், மட்டக்களப்பு, புனித சிசிலியா மகா வித்தியாலயத்தில் கற்று முடித்த மறுவருடம் 1981இல் நித்திய வாக்குத்தத்தத்தையும் உவந்தளித்தார்.
அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் நற்கொள்கைகளை மதித்த அருட்சகோதரி மேரி எலிசபெத் அவர்கள், புத்தளத்தில் அமைந்திருந்த தேற்றாப்பளை இல்லத்திலும், பின்னர் லுணுகலை இல்லத்தி லுமிருந்து தன்னலமற்றநிலையில், பெயரையோ, புகழையோ விரும்பாமல் நற்பணியுடன்கூடிய அருட்பணி ஆற்றினார்.
ஆசிரியப்பணியில் அகமகிழ்வும், அர்ப்பணிப்பும்
அறியாமை இருள் அகற்றி, அறிவூட்டும் குற்றமற்ற ஆசிரியப்பணியில் அருட்சகோதரி எலிசபெத் அவர்கள், இறைபணியுடன் இணைந்தவகையில், 1987இல் யாழ்ப்பாணம், அச்சுவேலியில் தற்காலிக ஆசிரியராகத் தனது கற்பித்தல் வாழ்வை ஆரம்பித்து மாணவர்களின் நல்லாசானாக இடம்பிடித்தார். உத்வேகமும், பணிபுரியும் துடிப்பும் இந்த இளம் ஆசானை பாடசாலை சமூகத்தினரிடையே இனம்காட்டி நின்றது. 1989இல் பண்டாரவளை, தமிழ் மகா வித்தியாலயத்தில் நிரந்தரபட்டதாரி ஆசிரிய நியமனம் பெற்று தனது கற்பித்தல் மேம்பாட்டை உறுதி செய்தார். பின்னர் 1993இல் இடமாற்றம் பெற்று, சிங்காரச் சிசிலியாவின் சிறப்பினைச் சீர்ப்படுத்தி உன்னதத்திற்கு இட்டுச்சென்ற பண்பால் உயர்ந்த பாசமிகு அதிபர் அருட்சகோதரி எம் டிலெக்ரா அவர்கள் அதிபராகவிருந்த காலப்பகுதியில், மட்டக்களப்பு, புனித சிசிலியா மகா வித்தியாலயத்தில் காலடி வைத்தார்.
ஆளுமைமிகு அதிபர் நிலை
இப்பாடசாலைக்காய் உழைத்த அதிபர்கள் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை யைச் சேர்ந்தவர்களே. ஓவ்வொருவரது உழைப்பும், நேர்மையும், ஒழுங்கும், இறைசீர்மையும் பாடசாலைக்கு வித்தியாசம் வித்தியாசமான புத்தம்புது மாற்றங்களைக் கொண்டு வந்தது.
பாடசாலை அதிபராகக் கடமையாற்றிய அருட்சகோதரி எம் டிலெக்ரா அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் மாகாணத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொழும்பு செல்ல, அருட்சகோதரி மேரி எலிசபெத் 1996இல் தற்கால அதிபர் பதவியிலமர்ந்து, 1999, ஆனித்திங்கள் 15ஆம் நாள் வரை பாடசாலையைச் சீராய் நிர்வகித்தார்.
பாடசாலையே அவரது மூச்சு. மின்னல் பொறி பறப்பதுபோல், புதுப்புது மாற்றங்கள் தலைநீட்ட ஆரம்பித்தன. 1996ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 16ஆம் நாள் நிரந்தர அதிபராகப் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து இளைப்பாறும் வரை இவருக்குள்ளிருந்த ஆளுமையும், பன்முகநிலைப்படுத்தப்பட்ட வீரியமும் காத்திரமாய் வெளிப்பட்டதெனலாம்.
புலமைமிகு அதிபரும் புலமைத்துவஆற்றுகையும்
“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்” என்பதற்கிணங்க பெருந்தன்மை உடையவர் பிறர் ஆற்றவியலாத செயல்களை முறையாகச் செய்து முடிப்பர் எனும் பொய்யா மொழி்க்கிணங்க பல்துறை வித்தகராக திட்டமிடுவதை திட்டமிட்ட கால நேரத்துக்குள்ளேயே முடித்துவிடும் ஓர் திறன்மிகு சிற்பியாகத் திகழ்ந்தார் அதிபர் அருட்சகோதரி எலிசபெத்.
கல்வி மேம்பாட்டில் இவரது தடம்
பாடசாலையின் ஆரம்பப் பிரிவு முதல் உயர்தரம் வரை இவர் கொண்டிருந்த தரிசனப் பார்வை நாளுக்கு நாள் வெற்றியாய் வெளிக்கிளம்பி நின்றது. இவரது கல்வித் திட்டமிடலினால் ஒவ்வோர் வகுப்பும் ஆரோக்கியமாய் உயிர்பெற்றன. மாணவர், ஆசிரியர் வரவு முனைப்புடன் உறுதியாக்கப்பட்டது. இதற்காக பரிசளிப்பு விழாவில் விசேட பரிசுத்திட்டமும் அமுலானது. மாணவர் இடைவிலகல் தடுக்கப்பட்டது. இவற்றின் ஆரோக்கியமான வௌிப்பாட ாய், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர் எண்ணிக்கை வருடாவருடம் கூடியது. க.பொ.த. சாதாரணப் பரீட் சையில் அதிகூடியளவு மாணவிகள் உயர்தரத்திற்கான தகுதி பெறும் நிலை அதிகரித்தது, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறும் வீதம் அதிகரித்ததுடன் வெவ்வேறு பட்டப்படிப்புக்களுக்காகப் பல்கலைக்கழக நுழைவு வீதமும் முன்னேறியது.
புனித சிசிலியா பாடசாலைச் சமூகத்தினரை தனிச் சிறப்பாளர்களாக இனங்காட்டவேண்டும் நடவடிக்கையின் ஓர் அம்சமாக ஆசிரியர்களுக்கான சீருடையையும், மாணவிகளுக்கான கருஞ்சிவப்பிலான சீருடையையும் முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகப்படுத்திய பெருமை எமது அதிபரையே சாரும். கல்விக் கண்காட்சிகள் இடையிடையே நிகழ்த்தப்பட்டதுடன், மட்டக்களப்பில் பலராலும் இன்றும் பேசப்படுகின்ற மாபெரும் கண்காட்சி (Education) 2013இல் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புறக்கிருத்திய வெளிப்பாட்டுக்கான பின்புலத் தூண்டல்
கல்விச் செயற்பாடுகளுக்கும் மேலாய் ஒவ்வோர் மாணவரும் ஆசிரியரும் தமது ஆற்றல்களின் ெவளிப்பாடுகளைப் பட்டை தீட்டவேண்டுமென ஒவ்வொருவரையும் ஊக்குவித்தார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றபோது அநேகர் இதில் பங்குகொண்டு தேசிய, மாகாண, மாவட்ட ரீதிகளில் அநேக பரிசில்களைச் சுவீகரித்திருக்கின்றனர்.
தேசிய பாடசாலை எனும் மகுடம்
அருட்செல்வி எலிசபெத் அவர்கள் நிரந்தர அதிபராகி பாடசாலைக் கட்டமைப்பை உயிரூட்டிப் பேணியதன் விளைவாக, இரு வருடங்களிலேயே 2001இல் புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. இவ்வுயர்ச்சிக்காய் இவர் காட்டிய வேகமும் விவேகமும் சொற்களில் விபரிக்கமுடியாத வை.
பாடசாலை பௌதீக வளங்களின் அபிவிருத்தி
இவரது காலத்தில் கட்டடங்கள் ஒவ்வொன்றாய் உருப்பெற்றெழும்பின. பாடசாலைச் சமூகத்தினரின் ஆரோக்கியமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காய் வகுப்பறைகள் செழுமையாய்க் காணப்படவேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார். கொய்யா வளவு என அழைக்கப்பட்டு பாடசாலையின் பின்புறம் காணப்பட்ட பெரியதொரு நிலப்பரப்பைப் பாடசாலைக்கெனச் சுவீகரிக்க முன்னாள் அதிபர் அருட்சகோதரி டிலெக்ரா எடுத்த அரும்பெரும் முன்னெடுப்பை அவரது சேவைக்காலம் முடிந்ததும் பதவிக்கு வந்த அருட்சகோதரி எலிசபெத் அரும்பாடுபட்டு தேவையான இடங்களில் இதற்கான அனுமதியைப் பெற்று இப்பாடசாலைக்கென உரித்தாக்கியமையானது வரலாற்றில் ஒரு சாதனையாகும். இரண்டு மாடிகளும், மூன்று மாடிகளுமென ஆங்காங்கே கட்டடங்கள் இவரது ஆளுமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
மிகச்சிறந்த அதிபர் எனும் உயர் விருது
அதிபர் அருட்சகோதரி மேரி எலிசபெத் நாளுக்கு நாள் வெளிக்காட்டிக்கொண்டிருந்த நிர்வாகத் திறமையும் ஆளுமைத்திறனும் மக்கள் மத்தியில் பெற்றிருந்த நன்மதிப்பும் அதிகரித்தநிலையில் 2010இல் ஜனாதிபதியிடமிருந்து அவ்வருடத்திற்கான மிகச்சிறந்த அதிபர் எனும் உயர்விருதைப் பெற்றுக்கொண்டார்.
விளையாட்டுத் துறையும் அதிபரும்
தேசிய, மாகாண, மாவட்ட ரீதியிலான பல விளையாட்டுப் போட்டிகளிலும். புனித சிசிலியா முத்திரை பதிக்க எமது அதிபர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. வலைப் பந்தாட்டம், ஓட்டப் போட்டிகள், கிரிக்கட், கராத்தே, மைதானப் போட்டிகள் என பலவற்றிலும் எமது மாணவிகள் பங்குகொள்ள ஊக்குவித்து பல பயிற்சியாளர்களை அழை த்து பயிற்சியும் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கும், புனித சிசிலியா மகளிர் கல்லூரிக்குமான வருடாந்த கிரிக்கட் போட்டிகளில் எமது பாடசாலை கணிசமானளவு வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.
கலைமிளிர்வும் அருட்சகோதரியும்
அருட்சகோதரி எலிசபெத் ஒரு பிறவிக் கலைஞர். அவர் பிறந்த குடும்பமே ஒரு கலைக்குடும்பம். புல தரப்பட்ட இசைக் கருவிகளை இயக்கும் ஆற்றல் இவருக்குண்டு. ஓர்கன் இசைப்பதில் இணையற்ற இன்பம் காண்பவர். வில்லிசை, நாட்டுக்கூத்து என இவர் சிறுவயதிலிருந்தே கொண்டிருந்த கலையார்வம் பாடசாலையிலும் இவற்றின் கலை மிளிர கால்கோளாக இயங்கினார். 1999இல் பொதிகைத் தென்றலும், 1995இல் பிருந்தாவனமும், பாடசாலையின் 125ஆவது நிறைவின்போது இயற்றமிழ், இசைத்தமிழ். நாடகத்தமிழ் நிகழ்வும், அன்னை வெரோனிக்காவின் நூற்றாண்டு நினைவாக 100 குரல்கள் நிகழ்வும், ஆங்கிலப் பாடல்களிலான ஈடுபாட்டை ஊக்குவித்தமையும், மேலைத்தேய பாண்ட் வாத்தியக் குழுக்களைக் கனதியடையச் செய்தமையுடன், கீழைத்தேய வாத்தியக்குழுவை பாடசாலையில் ஆரம்பித்தமையும், பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்றவற்றின் மேம்பாட்டுக்காய் உழைத்தமையும், நாடகத்துறை வளர்ச்சிக்கான கருத் தரங்குகளும் உள்நாட்டு, வெளிநாட்டு வளவாளர்களை வரவழைத்து இசைக்கருவிகளில் மாணவிகளை சிறப்படைய வழிவகுத்தமையும் இவரது கலை ஆர்வத்திற்குச் சில எடுத்துக்காட்டுக்களாகும்.
சமூகப் பணியில் அகமகிழ்ந்த அதிபர்
எவனுடைய ஆத்மா ஏழைகளுக்காக அழுகிறதோ அவனே மகாத்மா துயருற்ற, நிர்க்கதியான மக்களுக்கு உதவுவதில் அருட்சகோதரி எலிசபெத்துக்கு நிகர் அவரே. சமகாலத்தில் எதற்குமே பெயரையும் புகழையும் விரும்பும் இவ்வுலகில் எமது அதிபர் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் இவரிடமிருந்து உதவி பெற்றோர் எண்ணிலடங்காதவர்கள்.
ஆழிப் பேரலையாகட்டும், இடர்நிலை துன்புறும் மக்களாகட்டும் அனைவரையும் நேசிக்கத் தெரிந்த நல்லுள்ளம் அவருடையது.
சாதனைகளின் நெறியாளர்
சாதனை படைக்கப் பிறந்தவர் அருட்சகோதரி எலிசபெத். அவர் துணிந்து காலடி வைத்த பாதையில் அநேகம். வெற்றிக் கொடிகளுடன் பாடசாலையை நகர வைத்தவர் அவர். தமிழ்த்தினப் போட்டிகளில் 2010இலிருந்து தொடர்ச்சியாக மாகாணத்திற்கான விருதினை பெற்று வருவதும், கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டியில் 2010/11இல் விசேட விருதும், 2012/13இல் அதி விசேட விருது பெற்றமையும், புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியாலயத்தை கல்லூரியாக உயர் த்தியமையும்.
AAT நிறுவனத்தினால் பாடசாலை வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான போட்டியில் 2009இலிருந்து மாவட்டரீதியில் முதலிடத்தையும், 2013இல் மாகாணரீதியில் முதலிடத்தை பெற்றமையும், வலயக் கல்வி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்ளக மேற்பார்வையின் மேம்பாட்டுக்காய் முதலிடம் பெற்றமையும், க.பொ.த. சாதாரண, உயர்தர பரீட்சை முடிவுகளின்போது சில வருடங்களில் மாவட்டரீதியில் முதன்மை இடங்களில் வருகின்றமையும், சிங்கள தினப் போட்டியில் தமிழ் மாணவருக்கான போட்டிக்காய் முதலிடம் பெற்று ஜனாதிபதி விருது பெற்றமையும், 2011, 2012 ஆம் வருடங்களில் க.பொ.த. சாதாரண பரீட்சையில் மாகாண மட்டத்தில் பல முக்கிய பாடங்களுக்காய் “Best Performing School” எனும் சாதனை படைத்ததும், கல்வி அமைச்சும் மிட்சுயி சீமெந்து நிறுவனமும் இணைந்து நடத்திய வினாடிவினா போட்டிக்காய் முதலிடம் பெற்று ஒரு இலட்சம் பரிசுடன் திரும்பியமையும் எமது அதிபர் அருட்சகோதரி எலிசபெத்தின் ஊக்கத்துக்கும் மாணவர் ஆசிரியர்கள்பால் வழங்கிநிற்கும் ஊக்கத்திற்கும் கிடைத்த பரிசுகளேயாகும்.
ஆன்மீகத்துடன் தவழ்ந்துவந்த ஆளுமைத்தாய்
ஆன்மீகம் பற்றி மகாத்மா காந்தி கூறு கையில்,
சமயத்தைப் போதிக்க வேண்டாம், வாழ்ந்து காட்டுங்கள் எனும் கூற்றுக் கிணங்க பாடசாலையும் சமூகமும் அருட்சகோதரிகளின் ஆன்மீக வெளிப் பாட்டை அவரது நாளாந்த செயற்பாடு களில் ஆரோக்கியமாய்க் கண்டன. முன் மாதிரியான நிர்வாகத் திறன் கொண்ட அவர் எங்கு சென்றாலும் தனது முத்திரை பதிப் பார்.
நீண்ட நாளின் ஆளுமைப் பயணம் முருங்கனில் தொடர்கிறது
இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித சிசிலியா பெண்கள் கல்லூ ரியின் ஆளுமைமிகு அதிபர் அருட்சகோதரி எலிசபெத் இவ்வாண்டு மாசித் திங்கள் 23ஆம் நாள் இளைப்பாறி தற்போது மன்னார், அடம்பன் கார்மேல் இல்லத்தில் குரு மேலாளராக தனது ஆளுமையின் மற்றுமோர் வடிவினை வெவ்வேறு கோணங்களில் சாதித்து வருகின்றமை மகிழ்வைத் தருகின்றது. இங்கர் சால் எனும் அறிஞன் கூறுவதுபோல உனது நல்ல செயல்களின்மூலம் பிறருக்கு வழிகாட்டியாயிரு எனும் கூற்றை அருட் சகோதரி மெரி எலிசபெத் வாழ்ந்தே காட்டிக் கொண்டிருப்பவர்.
இன்னும் அவரிடம் நிறையவே உண்டு. அவரது அவ்வாளுமையின் வெளிப்பாடு நிச்சயமாய் அவ்வப்போது வெளிக்கிளம்பிவரும் இது நிச்சயம்.
0 Comments