வாகரைக் கோட்டத்தில் புலமைப்பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் புதன்கிழமை பாடசாலைக்கு சென்று சித்தி பெற்ற மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டியதுடன், மாணவர்களுக்கு உதவிகளையும் வழங்கினார்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்கேஸ்வரா வித்தியாலயத்தில் சித்தி பெற்ற மாணவன் கோ.தனுஜன் (புள்ளி 178), மாணவி சு.சுகிர்தா (புள்ளி 165) மற்றும் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் சித்தி பெற்ற மாணவி ம.மிதுர்ணா (169 புள்ளி) ஆகியோர்களை கௌரவித்து துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
இதன் போது கதிரவெளி விக்கேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிபர் நா.சந்திரலிங்கம், கற்பித்த ஆசிரியர்களான செ.தேவானந்தம், ஜீ.ஜீவனேஸ்வரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டதுடன், வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் கற்பித்த ஆசிரியர் எஸ்.பிரதீபன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அத்தோடு அப்பாடசாலையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டி பாராளுமன்ற உறுப்பினரின் சம்பள நிதியில் இருந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வாகரை பிரதேசத்தில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக கடந்த மூன்று வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி ஊக்கப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
0 Comments