அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து பிரதேச கால்நடை பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்தக் காணிகளின் உரிமை தொடர்பாக, முஸ்லிம் விவசாயிகளுக்கும், கால்நடைப் பண்ணையாளர்களான தமிழர்களுக்கும் இடையில் நீண்டகாலமாகவே முறுகல்நிலை காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் பொலிஸாரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
|
எதிர்வரும் 5ம் திகதி வரை இரு சாராரும் அந்த பகுதிக்குள் நுழைய பொத்துவில் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் தடை பிறப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள், அடையாளம் தெரியாத நபர்களினால் இரண்டு பசுக்களின் தலைகள் வெட்டப்பட்டு பிரதான வீதியில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்த சம்பவமானது தங்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளதாக பிரதேச கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளரான சீனித்தம்பி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். பசுக்களின் தலைகள் காணப்பட்ட காணிகளிலிருந்து ஏனைய கால்நடைகளை அகற்றாவிட்டால் இதேநிலை தான் பண்ணையாளர்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கும் வாசக அட்டைகளும் அங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தங்களால் அடையாளம் காண முடியாவிட்டாலும் இந்த சம்பவமானது தங்களுக்கும் தங்களது கால்நடைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பாக, தலை துண்டிக்கப்பட்ட பசுக்களின் உரிமையாளர்களினால் பொலிஸிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
0 Comments