இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திலே, சரியான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அடிப்படையிலான சுய நிர்ணய உரிமையோடு கூடிய ஒரு தீர்வு என்பதுதான் முஸ்லிம்களுக்கு வேண்டும்
எதிர்கால அரசியல் வியூகத்தை வகுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தொடர்ந்தேர்ச்சி யான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒப்புக் கொண்டிருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தையிலே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான விடயங்களைத் தெளிவாக பேசிக் கொள்ள வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தில் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் ஏ.எல்.பாறூக் தலைமையில இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
இன்று முக்கியமான அரசியல் சூழ்நிலை இலங்கையில் நிலவுகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் எல்லா அரசியல் கட்சிகளும் துள்ளிக் குதித்து எழுந்துள்ளன.
எல்லா ஊடகங்களும் ஊவா மாகாண சபைத் தேர்தல் அரசுக்கான ஒரு சிவப்புச் சமிக்ஞை என்று கூறுகின்றன.
எனது பார்வையில் இது அரசுக்கு மாத்திரம் சிவப்பு சமிக்ஞை அல்ல, இது எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு சிவப்பு சமிக்ஞைதான். கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்குகள் குறைந்திருப்பது சிவப்பு சமிக்ஞை என்றால், கடந்த காலங்களில் இருந்த பிரிவினை போல எதிர்க் கட்சிகள் தொடர்ந்து பிரிவினையில் இருந்தால் அது உங்களுக்கும் ஆகாது என்று எதிர்க்கட்சிகளைப் பார்த்துச் சொல்கின்ற ஒரு சிவப்பு சமிக்ஞையும் கூட என நான் கருதுகின்றேன்
எனவே, எதிர்க்கட்சிகளில் பிரதான இடத்தில் இருக்கின்ற ஐ.தே.க. இதனைக் கணக்கில் எடுக்கவில்லை போல்தான் தெரிகிறது.
அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதனைப் பொருட்படுத்தவில்லை. ஜே.வி.பி. தலைவரும் அதன் முக்கிய உறுப்பினர்களும், சரத் பொன்சேகாவுக்குரிய கட்சியும் தங்களுக்குரிய இந்த மிகப் பெரிய சிவப்பு விளக்கு சமிக்ஞையை பொருட்படுத்தவில்லை என்பது போலதான் தேர்தலுக்குப் பின்னரான அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
உண்மையிலேயே ஊவா மாகாண சபைத் தேர்தல் இந்த நாட்டினுடைய ஒட்டு மொத்த ஜனநாயக அரசியலின் தேர்தல் நடைமுறைகளை பிழையானது என்று காட்டுகின்ற சிவப்பு விளக்கு என்பதைப் புரிந்து கொள்ளுகின்ற போது மாத்திரம்தான் எதிர்காலத்திலே ஒரு உருப்படியான ஜனநாயக அரசியல் முறைமையைக் கொண்டுவர முடியும்.
எல்லா இனங்களையும் சமத்துவமாக மதிக்கின்ற எல்லோரும் இலங்கையர்கள் என்கின்ற யாப்புத் திருத்தம் வந்தால்தான் இலங்கை இனப்பிரச்சினையின் சகல வடிவங்களும் ஒட்டு மொத்தமாகத் தீர்த்து வைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்த அடிப்படையிலே பார்க்கின்றபோது இன்று நல்ல சகுனம் உருவாகியிருக்கின்றது.
முக்கியமாக சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தொடர்ந்தேர்ச்சையாக பேச்சு வார்த்தையில் ஈடுபட ஒப்புக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தையிலே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான விடயங்களைத் தெளிவாகப் பேசிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயமாகும்
இந்த இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்களிலே தமிழர்களுடைய அடிப்படை அபிலாஷை என்பது வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த ஒரு அலகு. அந்த அலகிற்குள்ளே தங்களுக்குள்ள உள்ளக சுய நிர்ணய உரிமை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நின்று கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திலே, சரியான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அடிப்படையிலான சுய நிர்ணய உரிமையோடு கூடிய ஒரு தீர்வு என்பதுதான் முஸ்லிம்களுக்கு வேண்டும்.
இந்தத் தீர்வு சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்கு முழுமையான அனுசரணையைக் கொடுக்கின்ற வகையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலே இதய சுத்தியோடு பேச்சுவார்த்தை அமைய வேண்டும்.
இதே போன்று வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்குச் சமாந்தரமாக உரிமையோடு வாழ நினைக்கின்ற முஸ்லிம் மக்களின் அபிலாஷையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
எனவே இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்தியதாக முஸ்லிம்களுக்கான தீர்வை தமிழ்த் தரப்பின் மேசையிலே போட்டு அலசி ஆராய்ந்து ஒத்திசைந்து எடுக்கின்ற அதன் இறுதி வடிவத்தை சிங்களப் பெரும்பான்மை அரச மேசை யிலே போடவேண்டும்.
அப்படி தமிழரும் முஸ்லிம்களும் இணக் கப்பாட்டுக்கு வந்து ஒருமித்த குரலுடன் சிங்களப் பெரும்பான்மை அரசிடம் கோரிக்கை வைக்கிற போதுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வு நீடித்து நிலைத்து நிற்கும் என்றார்.
0 Comments