தமிழக முதல்வர் பலகோடி ஊழல் செய்தார் என்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டு, முதல்வர் பதவி பறிக்கப்பட்டு விட்டது
கண்டிப்பான நேர்மையான நீதிபதி எனப் பெயரெடுத்த குன்காவின் தீர்ப்பு தவறானது என ஜெத்மலானி கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.
ஒட்டுமொத்த இந்தியாவும் ஊழல்,இலஞ்சம் என்ற போர்வையால் சூழப்பட்ட நாடு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
பல கோடி ஊழல் செய்தார் என்பதே ஜெயலலிதாவை சிறையில் அடைக்க நீதித்துறைக்கு கிடைத்த ஒரேயொரு காரணம்.
ஆனால் ஜெயலலிதாவை சிறையில் அடைத்தேதீர வேண்டும்,முதல்வர் பதவியை பறித்தே தீர வேணடும் என்பதற்கான பல காரணங்கள் இந்த வழக்கின் வலைப்பின்னலுக்குப் பின்னால் உண்டு.
இந்த வழக்கை விசாரிக்க கண்டிப்பான நீதிபதியென பெயரெடுத்த குன்கா தேர்ந்nடுக்கப்பட்டமைக்கான காரணம். இவ்வழக்கின் தீர்ப்பு பலகோடி சொத்துக்குவிப்பு சம்பந்தப்பட்டதே தவிர „தமிழகம்' சம்பந்தப்பட்டதும் அல்ல „அரசியல்' சம்பந்தப்பட்டதும் அல்ல என்பதை தமிழக மக்களுக்கு காட்டுவதற்கே.
நீதிபதி குன்காவிற்கும் மத்திய அரசின் நீதித்துறைக்கும் சம்பந்தமில்லை என்று அப்பாவித்தனமாக நிராகரித்துவிட முடியாது. இவ்வழக்கை இப்படித்தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற வழிநடத்தல் இல்லையென்று சொல்லிவிடவும் முடியாது.
இது ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு அல்ல,'தமிழகத்திற்கு' எதிரான வழக்கு. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்,பாஜக போன்ற தேசியக்கட்சிகள் அல்லாத தமிழர் சார்ந்த திராவிடக் கட்சிகளுக்கு எதிரான வழக்கு இது ஒரு பயமுறுத்தலும்கூட.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தமிழகம் இந்தித் தளத்திற்கு அப்பால் திராவிட,தமிழர் சார்ந்த போக்கைக் கொண்டு மாநிலம்.மதத்தை முன் நிறுத்தாத மாநிலம்.
ஆனாலும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு என்ற மோசடியைச் செய்தார் என்பதை தவிர்க்க முடியாது.
அதுவே தீர்ப்பென்ற நெம்புகோலுக்கு கீழ் வைக்கப்பட்ட சிறு கல்.
எவ்வளவு முயன்றும் தமிழகத்தில் காங்கிரஸ்ஸையோ பாஜகாவையே வெற்றிபெற வைக்க முடியவில்லையே என்ற கோபத்தில் கொண்டுள்ள அளவு காங்கிரஸ்சுக்கும் பாஜகாவிற்கும் சம அளவுதான்.
மத்தியில் ஆட்சியைப் பிடிக்க கடந்த தேர்தலில் காங்கிரஸ்ஸை தோற்கடிக்க பாஜக காங்கிரஸின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆட்சியைப் பிடித்ததே தவிர, ஆரியக் கொள்கை என்ற தண்டவாளத்தில்தான் இரு கட்சிகளும் ஒரே திசையில் பயணிக்கின்றன. பயணத்தில் நான் முந்தியா நீ முந்தியா என்பதுதான் அவர்களுக்கிடையிலிருக்கும் வேற்றுமை.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் அதிமுக,திமுக மற்றும் இதர கட்சிகள் கொண்டுள்ள கரிசணையை கவனத்தில் கொள்ளாது இத்தீரப்பின் அடிமட்டத்தில் காணப்பட்ட திட்டங்களைத்தான் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகள் யாவும் துணிவுடனும் தன் நம்பிக்கையுடனும் மேற் கொள்ளப்பட்டவையாக இருந்தன மட்டுமல்ல சிறந்த அரசியல்வாதியாக அவர் தனது நடவடிக்கை மூலம் நிரூபித்தும் வந்திருக்கிறார்.
இந்திய பிரதமர் தேர்தலில் போட்டியிட சகலவிதத்திலும் தகுதியானவர் என்ற கணிப்பு ஊடகங்கள் ஊடாக வெளிப்பட்ட போது அது சாதரண செய்தி என்று யாருமே சொல்லிவிட முடியாது.
பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தாலும்கூட தமிழகத்திலிருந்து ஒரு நாட்டை வழிநடத்தக்கூடிய அரசியல் தகுதி வாய்ந்தவர் ஒருவர் வெளிப்படுகிறார் என்பதை பாஜக அவதானித்தேயிருக்கும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் அதில் கலந்து கொள்ளாதிருந்தமையை இந்தியப் பிரதமர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார் என்றும் சொல்ல முடியாது.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தினால் திமுக எப்படித் தமிழகத்திலிருந்து துடைத்தெறிப்பட்டதோ அது போன்று சொத்துக்குவிப்பு வழக்கின் மூலம் அதிமுகவை துடைத்தெறியும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுள்ளதும் பாஜகவை தமிழகத்தில் நிலைநிறுத்தவே இந்த தீர்ப்பு.
பேரறிஞர் அண்ணா காலத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக போரடியது ஞாபகம் வரலாம். இப்பொழுதும் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் தமிழகம் பலத்த எதிர்ப்பைக் காட்டியவுடன் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியிலேயே அனைத்து தொடர்புளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,மற்றைய மாநிலங்களில் ஆங்கிலத்திலும் மாநில மொழியிலும் தொடர்புகளை பேணலாம் என மத்திய அரசு அறிவித்தது.
நரேந்திர மோடி பல வழிகளிலும் இந்தியாவை முன்னுக்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்பதில் நரேந்திர மோடி முனைப்பாக இருப்பதுடன் மெல்ல மெல்ல நரேந்திர மோடி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கொண்டு வர முயற்சிப்பார்.
ஜெயலலிதா திரைப்படத் துறையிலிருந்து வந்தவ ரென்றாலும் தனது தமிழக அரசியலுக்கு சினிமா மாயையை அவர் கொண்டு வரவில்லை.
அவர் நிர்வாகத்திறன்மிக்க அரசியல் ஆளுமை உல்ல பெண்ணாக அவர் தன்னை உருவாக்கிக் கொண்டார்.
ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பு சில விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளது.
தமிழக அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் உண்டு. ஆனால் ஜெயலலிதா இல்லாத தமிழக அரசின் பலம் தலைவன் இல்லாத வீடு போல் கேள்விக்குறியாகி நிற்கிறது.
இதில் ஜெயலலிதா விட்ட தவறு தனக்குச் சமனாக பலம் வாய்ந்த தலைவரை அவர் உருவாக்கவில்லை.
இப்பொழுது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் ஜெயலலிதா போல் ஆளுமை கொண்ட முதல்வரா என்பது கேள்விக்குறியே.
இதுவே இன்றைய அதிமுகவின் பலவீனம்.பன்னீர்செல்வம் தன்னை ஆளுமை உள்ள முதல்வராக உருவாக்கிக் கொள்ளாத பட்சத்தில் விவேகமாக நடந்து கொள்ளாத பட்சத்தில் இதுதான் தருணம் என கல்லெறியத் தொடங்கிவிடுவார்கள் உதிரிக் கட்சிகள்.
இந்த இரண்டு வருட கால எல்லைக்குள் பாஜக அதிமுகவை தமிழகத்திலிருந்து துடைத்தெறிவதற்கு சட்டப்போர்வையை போர்த்திக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச்செய்யத் தயங்காது.
எல்லா நடவடிக்கைக்கும் சட்டப்படியே....என முடித்துவிடும்.
இதுவரையில் உள்ள நிலவரப்படி ஜெயலலிதாவின் சிறைவாசம் முடிய நான்கு ஆண்டுகள் செல்லுமாயின் அதற்கிடையில் அதிமுக பலமிழந்து உருக்குலைந்து போவதற்கும் வாய்ப்புண்டு.
தமிழக முதல்வராக யார் இருந்தாலும் அவர் பணிப்பை அதிமுக உறுப்பினர்கள் அமைச்சகர்கள் ஏற்று கட்சியை பலமாக வைத்திருப்பது மட்டுமல்ல,மக்களின் வாழ்வில் மிக அக்கறைகொண்டவராக அரசியலை கொண்டு செல்லல் வேண்டும்.
ஜெயலலிதா செய்ததைவிட பலமடங்கு நன்மைகள் செய்ய வேண்டும். நேர்மை தவறின் மிகச்சிறு தவறுகூட அதிமுகாவை தலைகீழாக விழுத்தும்.
பாஜகவின் திட்டம் திராவிடக் கட்சிகளை தமிழகத்திலிருந்து துடைத்தெறிவதுதான். அதற்கான திட்டமிடலை ஆரம்பித்துவிட்டது பாஜக.தமிழக மக்களின் கையிலேதான் எல்லாமிருக்கிறது.
இது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பு அல்ல'தமிழக மக்களுக்கு' எதிரான தீர்ப்பு.
பிணை மனு தொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவிற்கு பிணை கிடைக்குமானால் பாஜகவின் திட்டமிடல் தலைகீழாக மாறும்.
ஜெயலலிதா தொடர்பான வழக்கின் திரைமறைவுச் சதிகள் இன்று வெளிவராவிட்டாலும், ஒருநாள் வெளிவரும்.
ஏனென்றால் உலக நாடுகளில் பல தலைவர்களின் வழக்குகளில் திரைமறைவில் காணப்பட்ட தில்லுமுல்லுகள் பின்னர் வெளிவந்திருக்கின்றன.
இந்த வழக்கு நேர்மையானது என அப்பாவித்தனமாக எண்ண முடியாது.
க.வ.ஜெயதாசன்:-
0 Comments