இன்னும் ஆறு மாத காலத்தில் நாட்டு அரசியலில் ஏராளமான மாற்றங்கள் நடைபெறவுள்ளன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய பாதையில் பயணிக்க எத்தனித்துள்ளது. தேவையேற்பட்டால் தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவும் தயாராகவுள்ளது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன்அலி எம்.பி.தெரிவித்தார்.
முல்லை முஸ்ரிபா எழுதிய ‘சொல்லில் உறைந்துபோதல் ‘நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ‘ரிபாய் ஹாஜியார்’ மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஹஸன்அலி எம்.பிதொடர்ந்து உரையாற்றுகையில், பதினெட்டாவது அரசியல் திருத்தம் பற்றி பலரும் அதிருப்தியில் பேசுகின்றனர்.அதற்கு நாங்களும் ஆதரவு வழங்கியுள்ளோம். அது தொடர்பில் எமது கட்சியின் தலைவர் ‘கண்ணைத்திறந்து கொண்டு படுகுழியில் விழுந்ததாக’ ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.அதேபோன்று ‘கண்ணை மூடிக்கொண்டு படுகுழியில் விழுந்ததாக’ நான் குறிப்பிட்டுள்ளேன்.சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாகவே இவ்வாறான விடயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிவந்தது.
அரசாங்கம் எமக்குத்தந்த பொய்வாக்குறுதிகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.அதனை நிறைவேற்றவுமில்லை.இனியும் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.பதினெட்டாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியபோது அது தொடர்பில் கட்சிக்குள் கடுமையாக முரண்பட்டுக்கொண்டவன் நான்.
மு.கா.இக்கட்டான அரசியல் செய்துகொண்டிருக்கிறது.எனினும் மடத்தனமான அரசியல் செய்யவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து முதலமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டு ஆட்சியமைத்திருக்கலாம் என குறிப்பிடுகின்றனர்.எமது பிரச்சினை அதுவல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பதினொரு ஆசனங்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏழு ஆசனங்களும் கிடைத்தன.இந்த பதினெட்டு ஆசனங்களை வைத்து ஆட்சியமைக்க முடியாது.ஆட்சியமைக்க பத்தொன்பது ஆசனம் தேவை.எனவே அந்த ஒரு ஆசனத்திற்குரிய எந்த தரப்பும் அப்போது எம்மோடு பேசவில்லை.
மேலும் நாம் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்திருந்தால் ஏனைய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.ஆகவே வெளியில் உள்ள முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையுமிருந்தது.எனினும் அந்த எதிர்பார்ப்பும் இன்று பொய்த்து விட்டது.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வைப்பதற்கு முயற்சி செய்தார்கள்.அதிலிருந்து கட்சியைக் காப்பதற்கு நான் இரண்டு நாள் யாரும் என்னைக் கண்டுகொள்ள முடியாத வகையில் தலைமறைவாகியிருந்தேன்.அவ்வாறு செய்தாவது கட்சியைக் காப்பாற்றினேன்.பதுளை மாவட்ட முஸ்லிம்கள்தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இணைந்து போட்டியிட வைத்தார்கள்.தேர்தலின் பின்னர் இந்த கூட்டணி மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினரை 25 உலமாக்களைக் கொண்ட குழுவுக்கே பொறுப்பு சாட்டும் திட்டம் அங்கு நடந்துள்ளது.தெரிவு செய்யப்படும் உறுப்பினருக்கு கிடைக்கும் நிதிகூட அந்த குழுவாலேயே கையாளப்படவுள்ளது.
ஆனாலும் பத்திரிகைகளில் அந்தக் கூட்டணிக்கெதிராக பலவாறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.அந்த கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை குறைப்பதற்கான சதி என்றும் குறிப்பிடுகின்றனர்.நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பல சூழ்ச்சிகளை அரங்கேற்றியது ஐக்கிய தேசியக் கட்சிதான். முஸ்லிம்களை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்றதும் ஐக்கி யதேசியக்கட்சிதான் என்றும் குறிப்பிட்டார்.
0 Comments