மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு செல்லக்கதிர்காமம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாலயத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் வந்து தங்கிச் செல்வதுண்டு. கி.பி. 1600ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றில் உள்ள கெருடாவில் என்னும் இடத்தில் இருந்து கதிர்காமத்திற்கு கால் நடையாக வந்த முனிவர் ஒருவர் அடர்ந்த காடுகளும் நீர்ச்சுனைகளும் இருந்த இவ்விடம் தனது தவத்திற்கு சிறந்த இடம் எனக் கருதி இங்கு ஓர் சிறிய கோயிலை அமைத்து வழிபட்டதாகவும் தான் கொண்டு வந்த அரிய பல விதைகளில் ஒன்றான தத்தாக்கு விதையை இவ்வாலயத்தில் நட்டு இக்கோயிலுக்கு ”செல்லக் கதிர்காமம்” என்ற பெயரையும் இட்டதாகவும் ”உலக குருநாதர்” என்றழைக்கப்பட்ட இம்முனிவரின் ஊர்க்காரர்களான ஆதிகுருமார் என்பவர்கள் கெருடாவிலிருந்து இங்கு வந்து தங்கியதாகவும் இவர்ககளின் பெயரால் இவ்விடம் ”குருநாதர் மடம்” என்ற பெயர் பெற்றதாகவும் இதுவே மருவி ”குருக்கள்மடம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 1607ல் இவ்வூர் பெரியவர்கள் உதவியுடன் செல்லக் கதிர்காம ஆலயத்தின் கும்பாவிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலின் வடக்கில் நன்னீர்ச் சுனைகள் காணப்படுகின்றன. இச்சுனைகள் ஆலயத்தீர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன. . இத்தீர்த்தக் குளங்களிலிருந்து மழை காலங்களில் பெருகி வழியுமம் நீர் செல்லக் கதிர்காம ஆலயத்தினருகில் ஆறுபோல் ஓடுவதாகக் கூறப்படுகின்றது. இச்சுனைகளுக்கும் கோயிலுக்கும் இடையில் உள்ள ”வேதமடு” என்ற இடத்தில் புராதன ஆலயம் ஒன்று இருந்தது. திருவிழாக்காலங்களில் இறுதி நாளன்று வேதமடு ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்து எழுந்தருளுவதாக கூறப்படுகின்றது. இத்தீர்த்தக்குளங்களுக்கு கல்லாற்றில் இருந்து நீர் கிடைக்கப் பெறுகின்றது. பண்டைய காலத்தில் ஓந்தாச்சிமடத்தில் இருந்து கால்வாய் ஒன்றின் மூலம் இத்தீர்த்தக் குளங்கள் இணைக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகின்றது.
கி.ப. 13ம் நூற்றாண்டில் குளக்கோட்டன் காலத்தின் பின்பே குருக்கள்மடத்தின் வரலாற்றுத் தொடர்புகள் அறியப்பட்டுள்ளன. இக்காலப் பகுதியில் பழுகாமத்தை பரிபாலனம் செய்து வந்த வன்னிமைகள் வாவியின் கிழக்குக் கரையில் பூந்தோப்புக்கள் அமைத்து கோடை காலங்களில் இங்கு வந்து சென்றுள்ளனர். பூந்தோப்புக்கள் இருந்த இவ்விடம் இப்போதும் ”நந்தவனம்” என அழைக்கப்படுகின்றது. மட்டக்களப்பு வாவிக்கும்ம் குருக்கள்மடம் கிராத்திற்கு இடைப்பட்ட இப்பகுதியில் பல நன்னீர்ச் சுனைகள் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. மிக வரட்சியான காலங்களில் கூட நீர் பொங்கியெழும் இப்பகுதியிலேயே பூந்தோப்புகள் அமைக்கப்பட்டியிருந்தன. சுமார் 4 அடிக்குள் நிலத்திடியில் இங்கு நிரைக்காணலாம். இன்னும் இப்பகுதில் வாழை, கமுகு, கரும்பு, தென்னை போன்ற மரங்கள் செழிப்புடன் வளர்ந்து சோலைகளாக காட்சி தருகின்றன. கண்டி மன்னர்களின் தொடர்புகளும் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. பௌத்தத்துடன் சைவத்தையும் வளர்த்து வந்த இம்மன்னர்களால் செல்லக்கதிர்காம முருகன் ஆலயம் புனரமைக்கப்பட்டபோது இங்கு சந்திரவட்டக்கல் போன்ற பௌத்த மரபுகள் சேர்க்கப்பட்டன.
அண்மைக்கால ஆய்வுகளின் படி குருக்கள்மடம் பகுதிக்கு வந்த முனிவரான உலக குருநாதர் என்பவர் சீக்கிய மதத் தலைவரான குருநானச் சுவாமிகளே என வட இந்திய ஆய்வாளரான அசோக்குமார் காந்த் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இவர் முன்வைப்பது இங்குள்ள தீர்த்தக்குளங்களின் அருகில் உள்ள ஓர் விருட்சமும் முருகன் கோயில் கிடைத்த குருநானக் என பெயர் பொறிக்கப்பட்ட கற்துண்டுமே . இம் மரம் சீக்கியர் நாடான பஞ்சாப்பில் மட்டுமே காணப்படுவதாகவும் இம்மரத்தின் கீழே தான் குருநானக் முனிவர் தவம் செய்ததாகவும் அருகில் இருக்கும் தீர்த்தக் குளங்களில் அவர் நீராடியதாகவும் அசோக்காந் கூறுகின்றார்.
மேலும் குருக்கள்மடததிற்கு உலககுருநாதர் என்னும் முனிவர் வந்த காலமும் குருநானக் முனிவர் இலங்கைக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள காலமும் கிட்டத்ததட்ட ஒத்துப்போகின்றது. அத்தடன் குருநானகக் முனிவரின் வரலாற்றுக் குறிப்புகளில் அவர் மட்டக்களப்பு வந்து அங்கிருந்து தெற்குப் பக்கம் 7 மைல் தூரத்தில் இருந்த ஓர் கிராமத்தில் தங்கிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் உலக குருநாதர் தொண்டமானாறு கெருடா பகுதியில் இருந்து குருக்கள்மடத்திற்கு வந்ததாக வி.சி. கந்தையா வேறு ஓர் குறிப்பில் வேதாரணயத்தில் இருந்து வந்ததாகவும் எழுதியுள்ளார்.
நினைவு மலர் , அருள்புத்தகம், பத்திரிகை
0 comments: