மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் அடிப்படை வசதிகள் வழங்கப்படாத நிலையில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
1952 ஆம் ஆண்டில் கிராம சபையாகவும் பின்னர் பட்டின சபையாகவுமிருந்த ஏறாவூர் இன்று நகர சபையாகத்தரமுயர்த்தப்பட்டுள்ளது. சுமார் பத்தாயிரம் தமிழ் மக்கள் வாழும் இந்த நகர சபையின் எல்லைக்குள் 4 ஆம் மற்றும் 5ஆம் குறிச்சிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர்.
1952 ஆம் ஆண்டுக்குப் பின் இத்தமிழர் வாழும் பகுதிகளிலுள்ள வீதிகளெதுவும் செப்பனிடப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிராம சபையாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட மண் (கிரவல் ) வீதிகளே இன்றுமுள்ளன. ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட ஏனைய பகுதிகளின் வீதிகள் செப்பனிடப்பட்டு தார் வீதிகளாக மாற்றப்பட்டு நகர சபையால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழர் வாழும் பகுதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன் என்ற வினாவுக்கு விடை காணப்பட வேண்டும்.
4 ஆம் குறிச்சியிலுள்ள தாமோதரம் வீதி, தோம்புதோர் வீதி, கந்தப்போடி வீதி, தாமரைக்கேணி வீதி, தம்பாபிள்ளை வீதி, நல்லதம்பியார் வீதி, கிராமக் கோட்டு வீதி, பன்னிச்சையடி வீதி, பெரியதம்பிரான் வீதி, கோயிலடி வீதி, எல்லை வீதி உட்பட பதினெட்டு வீதிகளும் அதேபோல் 5 ஆம் குறிச்சியிலுள்ள பாடசாலை வீதி, காளி கோயில் வீதி, பிள்ளையார் கோயில் வீதி, எல்லை வீதி, சித்தி விநாயகர் வீதி, மூங்கிலடி வீதி, லக்கி வீதி, செல்லதம்பி வீதி உட்பட பன்னிரெண்டு வீதிகளுமாக முப்பது தமிழர் வாழும் பகுதிகளிலுள்ள வீதிகள் எந்தவொரு அபிவிருத்தியும் இன்றி புறக்கணிப்புக்குள்ளாகியுள்ளமை எவராலும் கண்டுகொள்ளப்படாதுள்ளது.
தமிழ் பகுதியிலுள்ள குறித்த வீதிகளுக்கு வீதி விளக்குகள் கூட வழங்கப்படாதுள்ளமை தெரிய வந்துள்ளது. சோலை வரியை தவறாது அறவிடும் ஏறாவூர் நகர சபை தனது நிர்வாக எல்லைக்குள் உள்ள தமிழர் வாழும் பகுதிகளைக் கண்டு கொள்ளாதிருப்பது இனவாதமா என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. 1990இல் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அன்றைய அரசின் ஆதரவாளர்களால் இடம்பெயரச் செய்யப்பட்டமையும் பதிவாகியுள்ளது. தற்போதும் கூட அன்று இனவெறியர்களால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களில் பலர் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையும் தடங்கலேற்படுத்தும் நிலையும் தெரியவந்துள்ளது.
விபுலானந்தா வித்தியாலயம் மற்றும் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய இரு தமிழ்ப் பாடசாலைகள் ஏறாவூரில் இயங்கும் அதேவேளை 1871 இல் சிரேஷ்ட தமிழ் கலவன் பாடசாலை என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பாடசாலை 1977 இல் தமிழர்களிடமிருந்து அகற்றப்பட்டு இன்று அலிகார் தேசிய பாடசாலை என்ற பெயரில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. காளி கோயில் வரசித்தி விநாயகர் கோயில் பத்திரகாளி அம்மன் கோயில் உட்பட பல கோயில்கள் இப் பகுதியில் உள்ளன.
ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட தமிழர் பகுதிகள் வீதிக்கட்டமைப்பு, மின்சார வசதி உட்பட பல அடிப்படைத் தேவைகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்படுவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனம் ஈர்க்கப்படாமை கவலைக்குரியது. மீள்குடியேற்றப்பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் அல்லாத பகுதிகளுக்குக் கிடைக்கும் பாரிய அபிவிருத்திகள் தமது பகுதிகளுக்குக் கிட்டாமை குறித்து அப்பகுதி மக்கள் ஆதங்கம் வெளியிடுவதைத்தவிர எதுவும் செய்ய முடியாதவர்களாயுள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் ஏறாவூர் தமிழர் பகுதிக்கு உரிய உரித்தான அடிப்படை வசதிகள் எப்போது வழங்கப்படும் என்பது புரியாதவொன்றாகவே காணப்படுகின்றது. நாடு பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்திகளைக் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ளது என்று பிரசாரப்படுத்தப்பட்டு வரும் இந்நாட்களில் அவையெல்லாம் ஏற்க முடியாத பொய்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழர் பகுதிகளின் உண்மை நிலைமையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதற்கு தக்க எடுத்துக்காட்டாக ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் விளங்குகின்றன.
நகர சபை எல்லைக்குள் வாழும் சகல மக்களுக்கும் பணியாற்ற வேண்டிய ஏறாவூர் நகர சபை தனக்குரிய பொறுப்புக்களைத் தட்டிக்களிப்பது மனிதாபிமானத்திற்குப்புறம்பான ஜன நாயகக் கோட்பாட்டை மீறும் அநாகரிக செயற்பாடு என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. நகரசபையால் வழங்கப்பட வேண்டிய வீதி சீரமைப்பு மின்சார இணைப்பு நீர் மற்றும் சுகாதார வசதிகள் தாமதமின்றி தடையின்றி ஏறாவூர் தமிழர் பகுதிகளுக்கும் கிட்ட வழி வகை செய்யப்பட வேண்டும்.
0 Comments