Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நிந்தவூர் மீனாட்சி அம்மன் கோயில் தாக்குதலை பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி நேரில் சென்று பார்வை.

பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி நேரில் சென்று பார்வை.
-
சேதங்களைத் திருத்த ரூபாய் 50 ஆயிரம் நிதிஒதுக்கீடு-
அண்மையில் இனந்தெரியாதவர்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நேற்று (31) நேரில் சென்று பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலியுடன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத் தலைவர் கே.கமலநாதன் தலைமையிலான குழுவினர் அன்போடு வரவேற்று, கோவிலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஒவ்வொன்றாகக் காண்பித்ததோடு, ‘இவ்வாலயத்தாக்குதலுக்கும், நிந்தவூர் பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது என்றும், இவ்வாலயத்திற்கும் இப்பிரதேச முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான இறுக்கமான உறவு பற்றியும் விலாவாரியாக எடுத்துக் கூறினர்.
அன்றிருந்து இன்று வரை எமது ஆலயத்தைச் சுற்றியுள்ள முஸ்லிம் விவசாயப் பெருமக்கள் தமது விளைச்சலில் சில நெல் மூட்டைகளை எமது ஆலய வளர்ச்சிக்காகத் தந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான தமிழ்-முஸ்லிம் உறவைப் பொறுத்துக் கொள்ள முடியாத தீய சக்திகளே எம்மைப் பிரிப்பதற்காக ஆலயத்தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாமென நம்புகின்றோம்’ எனத் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன்அலி கருத்து
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன்அலி கருத்துத் தெரிவிக்கையில் :
‘கிழக்கில் தற்போது தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடனும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருவதைக் குழப்பி, அதில் குளிர்காய நினைக்கின்ற தீயசக்திகளின் கைவரிசையாகவே இவ்வாலயத் தாக்குதலைப் பார்க்கின்றேன். பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட இக்கோயில் இதற்கு முன்னர் இவ்வாறு தாக்கப்பட்டது கிடையாது. இனியும் இத்தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதன் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆலய நிருவாகிகளை வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;:-
நான் பிறந்த காலந்தொட்டு இக்கோயிலை எனக்குத் தெரியும். இக்கோயிலுக்கும், இப்பிரதேச மக்களுக்குமான தொடர்புகள் பற்றி நான் நன்கறிவேன். எனது இளமைக் காலத்தில் பாடசாலை நண்பர்களுடன் இக்கோயில் பிரதேசத்திற்கு வந்து சமைத்துண்டு, ஆற்றில் குளித்து மகிழ்ந்துள்ளோம். இவ்வாலய விழாக்களைக் காண்பதற்காக நிந்தவூரிலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் பஸ்ஸில் பிரயாணித்து, மாட்டுப்பளை நெல் வயற் காணிகள் ஊடே சுமார் 500 மீற்றர், அல்லது 700 மீற்றர் தூரம் நடந்து வந்து இக்கோயில் திருவிழா விசேடங்களைக் கண்டிருக்கிறோம். நாங்கள் ஒரு போதும் கோயில்களுக்கோ, பன்சலைகளுக்கோ, தேவாலயங்களுக்கோ அநியாயம் செய்தவர்களில்லை.
ஒரு காலத்தில் பல பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் கலகங்கள் ஏற்பட்டு, தமிழ் மக்கள் தாக்கப்பட்ட போது நிந்தவூர்ப் பிரதேசத்தில் மட்டும் அவ்வாறான நிகழ்வுகள் நடந்து விடாமல், தமிழ் மக்களைப் பாதுகாத்தவர்கள் இவர்கள் என்றால் மிகையாகாது. நிந்தவூர்ப் பிரதேச மக்கள் எப்போதும் தமிழ் மக்களோடு சினகபூர்வமான உறவுகளைப் பேணியவர்கள் என்பது இலங்கையிலுள்ள எல்லாத் தரப்பினருக்கும் தெரிந்த விடயமாகும்.
இவ்வாறு இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன், அவரவர் கலாச்சாரங்களை மதித்து நடக்கின்ற வேளையில் இவ்வாறானதொரு கோயில் தாக்குதல் சம்பவம் எனக்குமிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென்று சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கோருகின்றேன்.
இவ்வாலயம் நிந்தவூப் பிரதேச எல்லைக்குள் அமைந்திருந்தாலும், மக்கள் செறிந்து வாழும் பகுதியிலிருந்து சுமார் மூன்றரை அல்லது நாலு கிலோ மீற்றருக்கப்பாலுள்ள மாட்டுப்பளை எனும் நெற்காணியிற்கு மத்தியில் இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்ற காரணத்தினாலும், அறுவடை தவிர்ந்த ஏனைய காலங்களில் மனித நடமாட்டமில்லாத அமைதியான சூழலாகக் காணப்படுவதனாலும் திட்டமிட்ட விசமிகளின் கைவரிசைக்குப் பொருத்தமாக அமைகிறது. எனவே இதன் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு ஆலய நிருவாகிகளை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆலயத்திருத்த Nலைகளுக்காக தனது நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரத்தை முதற்கட்ட நிதியாக ஒதுக்கியுள்ளார்.

Post a Comment

0 Comments