ஆற்றில் 3 மாணவர்கள் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆசிரியர்களின் பிரம்பு அடிக்கு பயந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஆற்றில் மாணவர்கள் உடல்
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வசாயில் வகாத் குருகுல் என்ற சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மும்பை மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது14), போரிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த பிரபுல் நாராயண் (14), டோம்பிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த குசால் நிலேஷ் (14) ஆகிய மூன்று மாணவர்களும் பள்ளி விடுதியில் தங்கி 9–ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த 25–ந் தேதி இரவு மாணவர்கள் 3 பேரும் திடீரென காணாமல் போய் விட்டனர். இந்த நிலையில், நேற்று மாணவர்கள் மூன்று பேரும் அங்குள்ள சூக் நதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து விரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
2 ஆசிரியர்கள் கைது
போலீஸ் விசாரணையின் போது பள்ளியின் உடற்கல்வி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் மாணவர்கள் மூன்று பேரையும் அடிக்கடி பிரம்பால் அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. எனவே தான் மாணவர்கள் விடுதியை விட்டு ஓடி சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
இதையடுத்து விரார் போலீசார் தனியார் சர்வதேச பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ரிப்புசுதான் சிவ்குமார் கார்த் (வயது32), சந்தீப் ஜன்யா பல்வா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் குற்றச்சாட்டு
இதற்கிடையே மாணவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்களது கன்னம் மற்றும் உடல் பகுதியில் காயம் இருப்பதாகவும் கூறினர். மாணவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசில் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்களின் சாவின் பின்னணியில் உண்மை நிலையை அறிய போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர். அந்த பள்ளிக்கூட நிர்வாகிகள், உடன் படித்த மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் பிரம்பால் அடித்து உதைத்ததாகவும், இதனால் அடுத்த நாள் பிரம்பு அடியில் இருந்து தப்பிக்க நினைத்து மாணவர்கள் 3 பேரும் விடுதியில் இருந்து தப்பி உள்ளனர். இரவு நேரத்தில் விடுதியின் சுற்றுச்சுவர் துவாரம் வழியாக வெளியேறி தப்பி இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட பள்ளக்கூட வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
0 Comments