Home » » அரசாங்கத்தினால் நீதி கிடைக்காவிட்டால் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதில் எந்தத் தவறும் இல்லை! - அரியநேந்திரன் எம்.பி

அரசாங்கத்தினால் நீதி கிடைக்காவிட்டால் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதில் எந்தத் தவறும் இல்லை! - அரியநேந்திரன் எம்.பி

அரசாங்கத்தினால் சரியான நீதி கிடைக்காவிட்டால் அதனை சர்வதேச தலையீட்டிற்கு கொண்டு செல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்துக் கூறுகையில்,ஒரு நாட்டிற்குள்ளே வாழ்கின்ற மக்களில் ஒரு பகுதியினர் அந்த நாட்டினை ஆட்சி செய்கின்ற அரசாங்கங்களினால் துன்புறுத்தப்படும் போது அந்த அரசாங்கத்தினால் சரியான நீதி கிடைக்காவிட்டால் அதனை சர்வதேச தலையீட்டிற்கு கொண்டு செல்வதில் எந்தத் தவறும் இல்லை.
கடந்த 66 வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் இங்கு வாழ்கின்ற ஏனைய இனங்களுக்கு இருக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்று பல்வேறு பேச்சுவார்த்தைகளையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதுவுமே தமிழ் மக்களுக்கான தீர்வினை மாறிமாறி வந்த இரண்டு அரசாங்கங்களும் கொடுக்காததன் விளைவுதான் கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வகை தொகையற்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாத்திரம் சொல்லவில்லை.
சர்வதேச மன்னிப்புச்சபை, மன்னார் ஆயர் இராயப்பு யோசப், மற்றும் வெளிநாடுகளின் செய்மதி மூலமாக ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்தான் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு மூலமாக விசாரணைகள் கோரப்பட்டிருக்கின்றது. இந்த விசாரணை மூலம் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு பிரிவினையும் மக்கள் நிம்மதியற்ற நிலையியும் ஏற்படும் என்று மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு துதி பாடுகின்றார்கள் இவர்களினது செயற்பாடுகள் பற்றி தமிழ்மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.
இவர்கள் கூறுவது போன்று தமிழ்மக்கள் எந்தவகையில் நிம்மதியற்று இருக்கின்றார்கள் என்று எமக்கு புரியவில்லை மாறாக 66 வருடங்களாக தமிழ்மக்கள் நிம்மதியற்று இருக்கின்றார்கள் என்று இவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா?
இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தால்தான் எதனையும் சாதிக்கலாம் என்று கூறுகின்றார்கள். அப்படியானால் வடமாகாணத்தில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுவரை சாதித்ததுதான் என்ன? அன்று மட்டக்களப்பில் அமைச்சர்களாக இருந்த கே.டபிள்யு.தேவநாயகம், நல்லையா, செல்லையா இராஜதுரை போன்றோர்களினால் தமிழ் மக்களுக்கான நிம்மதியினை பெற்றுத்தர முடிந்ததா? ஏன்பதனை இவர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
இவர்கள் கூறுவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொண்டால் இன்று சர்வதேச ரீதியாக தமிழ் மக்களினுடைய பிரச்சினை சென்றிருக்குமா? அல்லது வடகிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ஐக்கிய நாட்டுச்சபையில் ஒளித்திருக்குமா? இராணுவ குடியேற்றம் பற்றி யாராவது தெரிவித்திருப்பார்களா?
இவர்கள் வெறுமனே அரசாங்கத்தினை காப்பாற்றுவதற்காகவும் எஞ்சியிருக்கும் வடகிழக்கில் உள்ள தமிழர் பூர்வீக நிலங்களை சிங்கள மக்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காகவும் அயராது பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் த.தே.கூட்டமைப்பு அவ்வாறு இல்லை மட்டக்களப்பு ஆயர் அதிவணக்கத்திற்குரிய யோசப் பொன்னையா ஆண்டகையும் திருகோணமலை ஆயார் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையிலே சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.
அவ்வாறு மதப் பெரியார்கள் உண்மையினை அறிந்து செயற்படும் போது அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் கன்றுக்குட்டி அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் எமது வடகிழக்கு மக்களின் பிரச்சினை சர்வதேச ரீதியாக சென்றிருக்கும் இந்த காலகட்டத்தில் அதற்கான உதவியினை செய்யாவிட்டாலும் உபத்திரவத்தினையாவது செய்யாமல் அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குவது சாலப்பொருத்தமானதாகும் எனவும் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |