அவுஸ்திரேலிய கடல்பரப்பில் நுழைந்த இலங்கை அகதிகளின் படகை இந்தியா நோக்கி திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அந்தநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 153 அகதிகளுடன் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து 175 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த படகினை அங்கிருந்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டி ருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு திருப்பி அனுப்புவது சர்வதேச சட்ட மீறல் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
|
அதேவேளை, கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் கோளாறுகளுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இரு அகதிப் படகுகள் வழிமறிக்கப்பட்டாலும், அது பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லையென அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இரு படகுகளை கடற்படை ரோந்துப் படகுகள் வழிமறித்ததாகத் தெரிகிறதென ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.படகுகளில் இருந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது. இது உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆறு மாதத்திற்கு மேலான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவை அடையும் முதற்தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்களாக இருப்பார்கள்.
இவற்றில் ஒரு படகு இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படுகிறது. பொதுவாக அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் அரிதாகவே இந்தியாவில் இருந்து வருவதால், இது புதிய பிரச்சினையைத் தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த படகில், 37 பிள்ளைகள் அடங்கலாக 150 இற்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததாகவும், இது கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் வழிமறிக்கப்பட்டதாகவும் தெரிகிறதென ஏபிசி அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று காலை வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு கருத்து வெளியிட்ட குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், படகுகள் குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை எனத் தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக ஆட்கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதற்குக் காரணமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பாதிக்கக்கூடிய எந்தவொரு விடயத்தையும் சொல்லவோ, செய்யவோ போவதில்லை. எனவே, இந்த விடயத்திலும் மாற்றமில்லை என்றார் மொரிசன். படகிற்கு நேர்ந்த கதி பற்றி கேட்பதன் மூலம் தொழிற்கட்சியும், பசுமைக் கட்சியும் ஆட்கடத்தல்காரர்களுக்காக பேரம் பேசுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
|
0 Comments