Advertisement

Responsive Advertisement

கிழக்கில் ஆசிரியர்களுக்கான சம்பளநிலுவை பலவருடங்களாக இழுத்தடிப்பு!

கிழக்கு மாகாண அதிபர் ஆசிரியர்களுக்கு கடந்த பல வருடங்களாக வழங்கப்படவேண்டிய சம்பள நிலுவை மற்றும் சம்பள உயர்ச்சிஇன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. 17 கல்வி வலயங்களிலும் இதுவரை கோடிக்கணக்கான நிதி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டியுள்ளது. விரைவில் அந் நிலுவைகள் வழங்கப்படாவிட்டால் கிழக்கில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அதிபர்கள் ஆசிரியர்கள் தயாராகவேண்டும்.

இவ்வாறு இலங்கத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறைகூவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் கடந்த சில வருடங்களாக உரியவேளையில் அவர்களது சம்பள உயர்ச்சியையும் சம்பள நிலுவைகளையும் பெறமுடியாமல் திண்டாடிவருகின்றனர்.
இது தொடர்பில் பல அதிபர் ஆசிரியர்கள் ஏகப்பட்ட முறைப்பாடுகளை சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.இதேவேளை வேறுபட்ட முறைப்பாடுகளும் கிடைத்துவருகின்றன. ஒரு சில வலயங்களில் கையூட்டிற்கான சமிக்ஞைகளும் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஆசிரியர்களது கற்பித்தல்பணி திருப்தியெனின் சுயமாகவே இச்சம்பள உயர்ச்சி வழங்கப்படவேண்டியது கடமையாகும். ஆசிரியர்கள் தமது கடமைகளை சரிவரச்செய்யும்போது வருடாவருடம் சம்பள உயர்ச்சியப்பெறுவதென்பது அவர்களது உரிமையாகும்.
அச்சம்பள உயர்ச்சியை உரியவேளையில் வழங்காமலிருப்பதும் பதவியுயர்வு மற்றும் வகுப்பு மாற்றங்கள் ஏற்படும்போது அதிகரிக்கும்  சம்பள நிலுவைகளை வழங்காமல் இழுத்தடித்துவருவதும் ஆசிரியர்களது உரிமைகளை மீறும் செயலாகும்.

வலயக்கல்விக்காரியாலயங்களுக்குச்சென்று தமது சம்பள நிலுவைகளைக் கேட்கும்போது கணக்காளர்கள் அதற்கான நிதிவரவில்லை வந்தால் தருவோம் என்று பதிலளிக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டிநேரிடுகிறது. ஒரு சில வலயங்களில் ஒரு கோடிருபா வரை ஆசிரியர்களுக்கு நிலுவை வழங்கவேண்டியுள்ளதாக சங்கத்திற்கு தெரியவருகிறது.

சில வலயங்களில் ஆசிரியர்கள் அடுத்த வகுப்பிற்கு பதவியுயர்வுபெறும்போது அதற்கான சம்பளப் படிநிலையைக்கூட போடுவதற்கு மறுப்பதாக முறைப்பாடுகிடைக்கப்பட்டுள்ளன.
சமகாலத்தில் ஆசிரியர்களது சம்பளம் வாழ்க்கைச்செலவுக்கே போதாத நிலையில் இப்படியான இழுத்தடிப்புகள் அவர்களை மேலும் மனவேதனக்கும் பொருளாதார மிடுக்குக்கும் ஆளாக்குகின்றது.
எனவே கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் விரைவாக இந்நிலுவைகளை வழங்க முன்வரவேண்டும். இன்றேல் கிழக்கில் பாரிய தொழிற்சங்கப்போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்.

Post a Comment

0 Comments