கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலேஷிய விமானத்தில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை இழந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒரு வர், உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது மகள் மற்றும் அவரது கணவரை இழந்துள்ளார்.
வாழ்க்கையில் பலருக்கும் பல வகையில் சோகங்கள் ஏற்படுவதுண்டு.
ஆனால், ஒருவருக்கு ஒரே ஏர்லைன்ஸ் மூலமாக இப்படி ஒரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலேன் மன் என்ற பெண்ணின் சகோதரர் ரோட் பர் ரோஸ், அவரது மனைவி மேரி பர்ரோஸ் இருவரும் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
அவர்களை இழந்த சோகத்தில் இருந்து கை லேன் மன் இன்னும் மீளாத நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது மகள் மரீ ரிஸ்க் அவரது கணவர் ஆல்பர்ட் ஆகியோரை இழந்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை விமான விபத்தில் இழந்துள்ள கைலேன் மன் மற்றும் அவரது சகோதரர் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மலேஷிய பிரதமரின் பாட்டியும் உயிரிழந்தார்
இதேவேளை, சுட்டு வீழ்த்தப்பட்ட மலே ஷிய விமானத்தில் பயணித்த மலேஷிய பிரதமரின் பாட்டியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக்கின் (ஒன்று விட்ட) பாட்டி சித்தி அமீராவும் பயணித்து, பலியானது தற்போது தெரியவந்துள்ளது. நஜிப் ரசாக்கின் தாய் வழி தாத்தாவின் இரண்டாவது மனைவியான சித்தி அமீரா (வயது 83) உறவினர்களின் பராமரிப்பில் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்.
இன்னும் சில தினங்களில் ரமழான் பண்டிகையை தனது சொந்த மண்ணான இந்தோனேஷியாவில் கொண்டாடுவதற்காக இந்த பாட்டி ஆம்ஸ்டர்டாமில் இருந்து தனியாக விமானம் ஏறி வந்துள்ளார்.
இந்நிலையில் விமானம் ரஷ்ய- உக்ரைன் எல்லையை கடக்கும்போது சுடப்பட்டதால் அனைத்து பயணிகளுடன் அவரும் பலியாகியுள்ளார்.
ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் ஊர் திரும்பியபோது இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
0 Comments