இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும், பாரம்பரிய கடற் பிரதேசத்தில் பாதுகாப்பாக தொழிலில் ஈடுபடுவதனை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது 57 படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி சுமார் 700 க்கும் அதிகமான மீனவர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் ராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 5,000 தமிழக மீனவர்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது ராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஸவிடம் வினவியபோது, தமிழகத்தில் இலங்கை மீனவர்களின் 12 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமே தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments: