Home » » மலேசியன் விமானத்தை சுட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் : அதிர்ச்சித் தகவல்

மலேசியன் விமானத்தை சுட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் : அதிர்ச்சித் தகவல்

மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் தாக்கித் தகர்க்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் பக் ஏவுகணை லாஞ்சர் ஒன்று சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அனேகமாக அந்த லாஞ்சரிலிருந்துதான் பக் ஏவுகணை ஏவப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மலேசிய விமானம் தாக்கப்படுவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பு இந்த லாஞ்சர் அந்தப் பகுதியில் காணப்பட்டுள்ளது. மேலும் அதில் நான்கு பக் ஏவுகணைகளை படுக்க வைத்த நிலையில் மூடப்பட்டு காணப்படுகிறது. வீடுகள் நிரம்பிய ஒரு பகுதியில், மரத்திற்கு கீழே அந்த லாஞ்சர் காத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் தாக்குதலுக்குப் பின்னர் இந்த லாஞ்சர் ரஷ்யப் பகுதிக்குள் போனதையும் உக்ரைன் உளவுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அப்போது அந்த லாஞ்சரில் 2 ஏவுகணைகள் இல்லை என்றும் உக்ரைன் கூறுகிறது.
உக்ரைனின் டோரஸ் நகரில்தான் இந்த லாஞ்சர் காணப்பட்டுள்ளது. இது புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் உள்ளது. பக் ஏவுகணைகள் ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எந்த நாட்டிடமும் இத்தகைய ஏவுகணைகள் இல்லை. எனவே ரஷ்ய ஆதரவு இல்லாமல் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்று அமெரிக்க நிபுணர்களும் கூறி வருகிறார்கள்.
டோரஸ் நகரானது, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியிலிருந்து 10 மைல் தொலைவில்தான் உள்ளது. மேலும் இந்த பக் ஏவுகணை லாஞ்சர் நிறுத்தப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. இங்குள்ள வீடுகள் அனைத்துமே சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
அதேபோல ஏவுகணைகளுடன் கூடிய லாஞ்சரானது சாலையில் படு ரகசியமாக செல்லும் ஒரு வீடியோவும் கிடைத்துள்ளது. அந்த சாலையிலும் ஆள் நடமாட்டமே இல்லை. அந்த லாஞ்சர் மட்டும் தனியாக செல்கிறது.
அதேபோல இன்னொரு வீடியோ. அதே போன்ற ஒரு லாஞ்சர் படு வேகமாக ரஷ்யப் பகுதியை நோக்கி விரைகிறது. இது விமானத் தாக்குதலுக்குப் பின்னர் எடுத்த வீடியோவாகும். இப்போது அந்த லாஞ்சரில் 2 ஏவுகணைகள் இல்லை. அனேகமாக மலேசிய விமானத்தின் மீது இந்த இரண்டு ஏவுகணைகளும் வீசப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ரஷ்யாவை நோக்கி இது விரைவதைப் பார்க்கும்போது வேலையை முடித்து விட்டு மீண்டும் ரஷ்யாவுக்கே அந்த ஏவுகணை லாஞ்சரை திருப்பி அனுப்புவது போலத் தோன்றுகிறது.
buk-missile
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |