Home » » 1134 பேர் பலியான கட்டிடத்தில் இருந்து கையை வெட்டிப் போட்டு தப்பி வந்த பெண்

1134 பேர் பலியான கட்டிடத்தில் இருந்து கையை வெட்டிப் போட்டு தப்பி வந்த பெண்


வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'ராணா பிளாசா' ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்து 134 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சுமார் 2400 பேர் உடல் உறுப்புகள் சிதைந்து படுகாயமடைந்தனர்.

ஆயிரக்கணக்கான பிணங்களின் குடலை புரட்டும் துர்நாற்றத்தை மூன்று நாட்களாக சகித்துக் கொண்டு, இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் போராடிய ஒரு பெண், தனது ஒரே குழந்தையை காப்பாற்றவாவது உயிர் பிழைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது ஒரு கையால் ரம்பத்தை எடுத்து, மிகப் பெரிய கல்தூணின் கீழ் சிக்கியிருந்த மற்றொரு கையை வெட்டி வீசி விட்டு தப்பி வந்த சோகக் கதை தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கொடூர அனுபவம் தொடர்பாக தற்போது ஒற்றைக் கையுடன் மாற்றுத் திறனாளியாகி விட்ட ரோஜினா பேகம்(26) கூறுகிறார்..

'சம்பவத்துக்கு முந்தைய நாளே விபத்துக்குள்ளான கட்டிடத்தில் விரிசல் விட்டிருந்ததாக எங்கள் வீட்டின் அருகே வசிக்கும் முந்தைய ஷிப்டில் வேலை செய்த பெண்கள் கூறினார்கள்.

ஆனால், எங்கள் கம்பெனி நிர்வாகம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் கட்டாயமாக வேலைக்கு வந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் இதற்கு முன்பு வேலை செய்த சம்பளத்தை தர முடியாது என்று நிர்வாகம் மிரட்டியது.

சரி, விதி விட்ட வழி என்று கடவுளை வேண்டியபடி, காலையில் சமையலை முடித்து, மகளுக்கு உணவு ஊட்டி, பள்ளிக்கு அனுப்பி விட்டு, நானும் என் தங்கையும் வேலைக்கு சென்றோம். வேலை செய்துக் கொண்டிருந்த போது, சுமார் 9 மணியளவில் மின்சாரம் தடைபட்டது.

ஜெனரேட்டரை போட்ட போது, கட்டிடம் குலுங்க தொடங்கியது. 90 வினாடிகளுக்குள் மொத்த கட்டிடமும் தரை மட்டமாகி விட்டது. என் மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்து நசுக்கியதில் இதயத்தின் ஒரு பகுதியில் பயங்கரமான வலி எடுக்க ஆரம்பித்தது. காது வழியே ரத்தம் கொப்பளித்து வெளியேறத் தொடங்கியது.

என்னைச் சுற்றிலும் ஏராளமான பேர் கதறித் துடித்துக் கொண்டிருந்தனர். மரண ஓலம் என்ற சொல்லின் முழுப் பொருளை நான் அப்போது தான் உணர்ந்தேன். என் தங்கை என்ன ஆனாளோ..? என்று மனது பதறியது. அவள் பெயரை சொல்லி கதறிக் கதறி கத்தினேன், பதில் இல்லை.

இருட்டும் வரை கத்திக் கத்தி ஓய்ந்து மயங்கி விழுந்து விட்டேன். மறுபடி நான் கண் விழித்த போது சம்பவம் நடந்து இரண்டு, மூன்று நாள் ஆகி விட்டிருக்கும் என்பதை அங்கு வீசிய பிண வாடையை வைத்தே அறிந்துக் கொள்ள முடிந்தது.

என் வயிற்றின் மீது சிமெண்ட் காண்க்ரீட் துண்டுகளும், இரும்பு கம்பிகளும் அழுத்திக் கொண்டிருந்ததில் உயிர் போவதைப் போன்ற தாங்க முடியாத வேதனை. தலையிலும் நிறைய காயங்கள், இடது கையின் மேல் மிகப் பெரிய ராட்சத தூண் விழுந்து நசுக்கிக் கொண்டிருந்தது.

சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி, உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? என்று அழைத்துப் பார்த்தேன். காங்கிரீட் குவியல்களுக்கு மறுபுறத்தில் இருந்து ஒரு டாக்டர் எட்டிப் பார்த்தார். 

என்னை நம்பி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கதறினேன்.

அவரால் நான் இருக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கி வர முடியவில்லை. 'உன்னுடைய கையை துண்டித்தால், நீ உயிர் பிழைக்கலாம்' என்று டாக்டர் கூறினார். சரி அப்படியே செய்யுங்கள் என்று அழுதபடி சொன்னேன். அங்கிருந்தபடியே ஒரு ரம்பவாளை தூக்கிப் போட்டார்.

'மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தூணின் கீழே சிக்கிக் கொண்ட கையை வெட்டிப் போட்டு விட்டு, மெல்ல எழுந்து வா..' என்றார், டாக்டர்.

என் ஒரு கையால், மற்றொரு கையை வெட்டும் துணிச்சல் எனக்கு வரவே இல்லை. ஆனால், இங்கேயே இருந்தால் நிச்சயமாக உயிர் பிழைக்க முடியாது. நம் மகளை யார் காப்பாற்றுவார்கள்? என்பதை நினைத்து பார்த்தேன். அடுத்த நொடி, எனது உடலுடனான இடது கையின் தொடர்பை என் வலது கையில் இருந்த ரம்பவால் துண்டிக்க தொடங்கி விட்டது.

அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பிணக் குவியலில் என் தங்கையின் உடலும் ஒன்று எனபதை 'டி.என்.ஏ.' சோதனை மூலம் டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். என் வாழ்க்கையில் என்னென்னவோ சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், இப்போது, உழைத்து சம்பாதிக்க உதவும் இரண்டு கைகளில் ஒன்றை இழந்து விட்டு, இனி எதிர்காலமே இருளடைந்துப் போன துக்கத்தில் நித்தம், நித்தம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்.'

ரோஜினா பேகம் மட்டுமல்ல.., இந்த கோரப் பேரழிவில் சிக்கி ஊனமுற்ற பல பெண்களின் துயரக் கதையும், 'உலகின் எந்த மூலையில் இருந்தாலும்.. வயிற்றுப் பிழைப்புக்காக ஏழைகள் எத்தனை கொடுமைகளை சந்திக்க வேண்டியுள்ளது?' என்று தான் சிந்திக்க வைக்கிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |