ஜெனிவாத் தீர்மானத்திற்கமைய விசாரணை ஒன்று இடம்பெறுமாயின் இங்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் அறிந்துகொள்ளும். அவ்வாறான ஒரு சூழல் ஏற்படுமாயின் இங்கிருக்கின்ற இராணுவம் வெளியேற்றப்படலாம் என சுவிஸ்நாட்டின் தூதுவர் தோமாஸ் லிட் செருடன் குழுவினர் தெரிவித்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த சுவிஸ்நாட்டின் தூதுவர் தோமாஸ் லிட் செருடன் மற்றும் அந்த நாட்டின் மனித விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சன்ரைன் ஒபோலென்ஸ்கீ ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் மாலை வடமாகாண முதலமைச்சரை அவருடைய யாழ்.இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்புத் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுவிஸ்நாட்டின் நிதியுதவியுடன் வடக்கில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற உதவித் திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் முடிவுறுத்தப்படவுள்ள நிலையில் அதன் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே குறித்த குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தனர். இவர்கள் என்னுடன் கலந்துரையாடிய போது தற்போது இங்குள்ள நிலை எவ்வாறுள்ளது-?- இங்குள்ள மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்? நாங்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம் போன்ற விடயங்கள் தொடர்பாக எம்மிடம் கேட்டறிந்து கொண்டனர்.
வடமாகாண சபைக்கு நியதிச்சட்டங்களை உருவாக்குவதற்கான நிதிப் பங்களிப்பினை சுவிஸ் அரசாங்கமே எமக்குச் செய்திருந்தது. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அவர்கள் எமக்கு உதவுவார்கள்.
இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்ற விடயம் தொடர்பாகவும் இவ்வாறு இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டுள்ளதால் சமூக, பொருளாதா விருத்திக்கு எவ்வாறான பங்கம் விளைவிக்கப்படுகின்றன என்ற விடயம் தொடர்பாகவும் அவர்களிடம் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
மேலும் தாம் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் தொடர்பிலும் அவர்கள் எம்மிடம் வினாவினர். இதன்போது நான் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளேன். வடக்கு– கிழக்கு தமிழர் பிரதேசமாக இருந்து வந்த இடங்களில் வடக்கு, கிழக்கு தொடர்ச்சியாக தமிழர் பிரதேசமாக இருக்கவில்லை என்று காட்டுவதற்காக சுமார் 500 சிங்களக் குடும்பங்களை இப்பகுதிகளில் குடியேற்றியுள்ள விடயத்தினையும் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இதேபோல் நாங்கள் இங்கு இராணுவப் பிரசன்னம் அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தோம். அதற்கு அவர்கள் ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்றால் இங்கு எவ்வாறான சூழல் நிலவுகின்றது என்ற விடயம் சர்வதேச நாடுகளுக்குத் தெரியவரும். சர்வதேச நாடுகளும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு விசார ணைகள் இடம்பெற்ற பின்னர் நாங்கள் குறிப்பிடுகின்ற இராணுவம் பற்றிய விடயங்கள் தொடர்பில் இராணு வத்தினரை கட்டாயமாக இங்கிருந்து திரும்பப் பெறவேண்டி வரலாம் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments