வியட்நாமில் வசித்து வரும் ஆஸ்திரேலியர் ஒருவர், அங்கிருந்து போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றுள்ளார்.
பாம் டிரங் டங் என்ற 37 வயது ஆஸ்திரேலியர் கடந்த ஆண்டு மே மாதம் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாய்நாட்டிற்கு புறப்பட்டார். டான் சான் நாட் விமான நிலையத்தில் அவரது சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 4 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கையும் களவுமாக பிடிபட்ட பாம் டிரங் டங் மீது தெற்கு ஹோ சி மின்ஹ் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தருவதாக 2 நபர்கள் வாக்குறுதி அளித்ததால் ஹெராயினை கடத்த முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டங்கள் அமலில் உள்ள வியட்நாமில், 600 கிராமுக்கு அதிகமாக ஹெராயின் அல்லது 20 கிலோவுக்கு அதிகமான ஒபியம் கடத்தினால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக 30 கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளனர்.
0 Comments