Home » » பாடசாலை கற்றுத்தராத, பாடசாலைக் கல்விக்குத் துணையான விடயங்களை கூத்து எமக்கு கற்றுத் தருகின்றது

பாடசாலை கற்றுத்தராத, பாடசாலைக் கல்விக்குத் துணையான விடயங்களை கூத்து எமக்கு கற்றுத் தருகின்றது

முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தினரால் இந்த வருடம் “அனுருத்திரன்” தென்மோடிக்கூத்து ஆடுவதற்கு உத்தேசம் செய்யப்பட்டது. கூத்தில் பெண்பாத்திரம் ஏற்பதற்கு ஓர் சிறுவனை அண்ணாவியார் நியமித்தார்.  திடீரென சிறுவன் கூத்தாட மறுத்துவிட்டான். ஏன் எனக்கேட்ட போது தன் தந்தைக்கு விருப்பமில்லை எனவும் இனி மேல் கூத்தாடக்கூடாது என உறுக்கமாக உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினான். உண்மையிலே அலங்காரரூபன் கூத்தில் மிகச் சிறப்பாக ஆடியவர்களுள் இச் சிறுவனையும் கூறலாம். அனுருத்திரன் கூத்தில் ஆடுவதற்கும் பூரண ஆசை இருந்தபோதிலும் தந்தையின் விருப்பத்துக்குமாறாக செயற்படக்கூடாது என்கின்ற ஒரே காரணத்;துக்காக தனது ஆசைகளை கட்டுப்படுத்தியவனாக காணப்பட்டான்.

“சிறுவனின் தந்தையிடம் பேசிப்பார்ப்போம்” என அண்ணாவியார் உட்பட பத்துபேர் சென்றோம். வீட்டில் தந்தை இல்லை தாயும், மகனுமே இருந்தார்கள். “மகனை கூத்தாட அனுப்புமாறு மிகப்பணிவுடன் பேசினோம்”. “இது நான் எடுக்கும் முடிவல்ல சிறுவனின் தந்தை வெளியே சென்றிருக்கின்றார் அவரிடம் கேட்டுக் கூட்டிச் செல்லுமாறு கூறினாள்” தந்தையின் வருகையை எதிர்பார்த்து சுமார் அரை மணிநேரம் வீட்டு முற்றத்தில் காத்திருந்தோம். பின் சிறுவனின் தந்தை வந்தார் சிறுவனின் தந்தையிடம் மிகப் பணிவுடன் அண்ணாவியார் பேச ஆரம்பித்தார். “உங்கடபொடியன கூத்தாட அனுப்புங்க நல்லா ஆடுறபொடியன்” என சாதுவாக தயக்கத்துடன் அண்ணாவியார் கதையை நகர்த்தினார்.
“கூத்தாடுறத்தால என்ன தம்பி இலாபம்? என்டபெடியன்ட படிப்பையும் நான் பாக்கனும்” எங்களைப் பார்த்து கேட்டார். அந்த ஒரு கேள்வி அங்கிருந்த அனைவரையும் திக்குமுக்காடவைத்தது. அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாக எண்ணி அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர். “கூத்தாடுறதால உங்கட மகன்டபடிப்புக் கெட்டுப் போறது மில்ல படிக்காதவன்தான் கூத்தாடுறெண்டுமில்ல. இந்தா இங்க  நிக்கவங்கள் எல்லாரும் படிச்சவங்கதான். இந்தா இவங்க மூன்றுபேரும் பட்டதாரிகள், இந்தா இவரு தமிழ் படிப்பிக்கிற ஆசிரியர், இவர் மட்டக்களப்பு பிரதேச செயலகத்துல வேலசெய்றாரு, இவங்க வெளிவாரிப் பட்டப்படிப்பு படிச்சிக் கொண்டிரிக்காங்க இவங்களும் இந்தக் கூத்துல ஆடுறாங்கதான்” எனஅறிமுகம் செய்துவைத்தார்.

இங்க பாருங்க எண்ட மகன்ர எதிர்காலம் தான் எனக்கு முக்கியம் ,அவன்ட படிப்புத்தான் எனக்கு முக்கியம் படிக்கிறவயசில கூத்து அது இதெண்டு என்னால அனுப்ப முடியாது. படிப்பு முடிஞ்சபிறகு அவனவச்சி எத்தின கூத்து வேணுமானாலும் பழக்கிகொள்ளுங்க” என்றார். .அங்கு சென்ற அனைவரும் மாறிமாறி பேசிப் பார்த்தோம் அவர் வசைந்து கொடுப்பதாக இல்லை இனி நிற்பதில் பிரயோசனமில்லை என புரிந்தது அனைவரும் திரும்பிவிட்டோம்.
அவர் கூறிய விடயங்களை வைத்துப் பார்த்தால் பாடசாலை படிப்புக்கு கூத்து முட்டுக்கட்டையாக உள்ளது என்பதாகும். படிப்பிற்கு கூத்து இடைஞ்சலாக இருந்திருந்தால் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் கூத்து ஆடக்கூடாதே! ஏன் ஆடுகின்றார்கள்?



கூத்து முற்றுமுழுதாக மாணவர்களின் கல்வி அறிவினை மழுங்கடிக்கின்றது என்றால் மட்டக்களப்பு சமூகமே கல்வி அறிவில் பின்தங்கிய இருண்ட காலமாக இருந்திருக்க வேண்டும். மட்டக்களப்பில் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கூத்துக்கள் ஆடப்பட்டுக் கொண்டே வருகின்றன. அதேவேளை கல்வி நிலையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறிருக்கும் அவர் ஏன் அவ்வாறு கூறியிருக்க வேண்டும்?.
கூத்து என்றாலே அதில் பல மனிதர்களின் கூட்டுச்செயற்பாடு காணப்படும் . பல பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் காலங்காலமாக பார்த்துவருகின்றனர். அப்படியென்றால் இவர்கள் என்ன முட்டாட்களா?. ஏதோ ஓர் விடயத்தை கூத்து எமக்கு அளிப்பதால் தானே அதனை அன்று தொடக்கம் இன்றுவரை பார்க்கின்றோம், இரசிக்கின்றோம். கூத்து எமக்கு எதுவும் செய்யவில்லை என்றால் ஏன் அதனைப் பேணிக்காக்க நினைக்கின்றோம்? அப்படியானால் கூத்து ஏதோ ஒன்றினை எமக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றது என்றுதானே அர்த்தம். பள்ளிக் கூடப் படிப்பு என்பது வெறும் புத்தகப்படிப்பு ஆனால் பல அனுபவ படிப்புக்களை கூத்து எமக்கு சொல்லி தருகின்றது. இதனை எவரும் மறுத்து விடமுடியாது.
இன்று
management (முகாமைத்துவ கற்கை) என்கின்ற பாடம்  பாடசாலைகளில் அறிமுகம் செய்து அதிகளவான மாணவர்கள் விரும்பி கற்கின்ற கற்கை நெறியாக இன்று காணப்படுகின்றது. ஆனால் இவ் முகாமைத்துவ கற்கையினை கூத்து எப்போ தொடங்கியதோ அன்றிலிருந்து கூத்து கற்பிக்கின்றது அது  எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களரி முகாமையாளர், கூத்து முகாமையாளர், முதலீட்டு முகாமையாளர்கள் எனபலர் அன்றிருந்து இன்று வரை கூத்தினை முகாமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அன்று எம் முன்னோர்கள் எமக்கு முகாமைத்துவ கல்வியினை கூத்தினூடாக கற்றுத் தந்திருக்கின்றனர். இன்று பாடசலைகளில் மாணவர் தலைவர் என்கின்ற பொறுப்பினை முற்று முழுதாக நிறை வேற்ற முடியாமல் தலையை பிச்சிக் கொண்டு திரிகின்ற மாணவர்களே அதிகம் உள்ளனர். காரணம் போதியளவு முகாமைத்துவம், தலைமைத்துவம்;;;;, என்பன இல்லாமையேயாகும் ஆனால் கூத்து பல்வேறுபட்ட எண்ணங்கள், சிந்தனையுடையவர்களை ஓர் வளிப்பாதையில் ஒருங்கிணைத்து அவர்களை செயற்படவைக்கின்றது.

கூத்து பலதரப்பட்ட மனிதர்களை இணைத்தெடுக்கின்ற ஓர் கலை வடிவம். எல்லா மனிதர்களும் ஒரே சிந்தனை கொண்டவர்களாக இருப்பதில்லை. ஓவ்வொரு மனிதரும் பல்வேறு எண்ணங்களையும், சிந்தனைகளையும், கொண்டவர்களாக காணப்படுவர். அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றபோது பொறுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, ஒன்றிணைவு, பிரச்சினைகளை சமாளித்தல், விட்டுக்கொடுப்பு, கீழ் பணிவு, என சமூகம் சார்ந்த அனுபவ படிப்புக்களை கூத்து எமக்கு கற்றுத்தருகின்றது. ஆனால் இவற்றினை பாடசாலை படிப்பு சொல்லித்தரமாட்டாது. பாடசாலை படிப்பினை முடித்தபின் நாம் அடுத்த கட்டமாக சமூகத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அத்தருணத்தில்தான் சமூகம் சார்ந்த படிப்பினைகளின் முக்கியத்துவம் புரியும். எவன் ஒருவன் பூரணமாக ஓர் கூத்தாடுகின்றானோ அவன் எவ்விடத்திலும், எந்த சமூகத்திலும் வாழ்ந்து வெற்றி காண்பான் என்பதில் அசையா நம்பிக்கை எனக்குண்டு.
பாடசாலை மாணவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் மனனம் செய்கின்ற மனப்பக்குவமாகும். பாசாலைக்கல்வியை பொறுத்தவரை மனனம் செய்கின்ற ஆளுமை மிக அவசியமான ஒன்றாகும். பேச்சிப்போட்டிகள், பாவோதல் போட்டிகள், கவிதைப் போட்டிகள், என்பவற்றில் பேசிக்கொண்டிருக்கும் போதே அரைவாசியில் மறந்துவிட்டு வெட்கித் தலை குனிகின்ற மாணவர்கள் எத்தனையோ பேரை நாம் கண்டிருக்கின்றோம். அதேவேளை நாமும் அந்த வேதனையை அனுபவித்திருக்கின்றோம். ஆனால் இலகுவாக மனனம் செய்து கொள்வதற்கான அடிப்படை மூலப் பயிற்சியினை கூத்து எமக்கு கற்றுக் கொடுக்கின்றது என்றால் எவரும் நம்புவீரா? ஆம் சாதாரணமாக கூத்தில் ஓர் பாத்திரத்திற்கு பாடல், விருத்தம், வசனம் அடங்கலாக குறைந்தது ஐம்பதுக்கு மேல் காணப்படும். அவற்றினை மிக இலகுவாக குறுகிய காலப்பகுதியினுள் ஏட்டண்ணாவியாரின் எளிமையான எடுத்துரைப்புடன் அனைத்து பாடல்களையும் எவ்வித பயம் , பதட்டமின்றி மனனம் செய்ய வைக்கின்றது. பிரதான பாத்திரங்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் காணப்படும். இன்னும் சொல்லப்போனால் எழுதவாசிக்கத் தெரியாதவர்கள் கூட நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை எவ்வித தங்குதடையுமின்றி சரமாரியாக மனனம் செய்து பாடுகின்ற அதிசயங்களையும் கூத்தில் காணலாம். பாடசாலைகளில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களே முழுமையாக மனனம் செய்ய முடியாமல் தவிக்கின்ற போது. எழுதவாசிக்கத் தெரியாதவர்களையும் இலகுவாகவும், முழுமையாகவும் மனனம் செய்ய வைக்கின்ற வல்லமை கூத்துக்கு மட்டும்தான் உண்டு.
பாடசாலை கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மிக முக்கியமான அம்சம் யாதெனில் பாடங்களில், கற்கைகளில், விரிவுரைகளில் சிரம் செலுத்துதல் அவசியமாகும். அதாவது விரிவுரைகளை உற்றுக்கவனித்தல் மிக முக்கிய அம்சமாகும். விரிவுரைகளை உற்றுக்கவனித்தல் என்பது மிகக் கடினமான ஓர் விடயமாகும். மனித மனம் ஓர் குரங்கு மனம் ஆங்காங்கே அலைபாய்ந்து கொண்டிருக்கும். இவற்றினைத்தாண்டி விரிவுரைகளை உற்றுக்கவனிப்பதென்பது மிகமிகக் கடினம். ஆனால் அதற்கான அடிப்படை பயிற்சிகளை கூத்து எமக்கு கற்றுக் கொடுக்கின்றது. கூத்தின் போதான அடிப்படை அசைவுகளை அவதானித்தல், பாடல், இராகங்களை கூர்ந்து கவனித்தல், ஏட்டண்ணாவியார் சொல்லித்தருகின்ற பாடலை கூர்ந்து உள்வாங்குதல், அடுத்து வரவிருக்கும் பாடலை தயார்படுத்துதல் என உற்றுக்கவனித்தலுக்கும், அவதானத்துக்குமான அடிப்படை பயிற்சிகளை கூத்து எமக்கு அன்றிருந்து இன்று வரைக்கும் இயல்பாகவே கற்பித்து வருகின்றது ஆனால் அதை நாம் புரிந்து கொள்ளாமல் கூத்தாடுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என தவறான மனப்பதிவினைக் கொண்டிருக்கின்றோம்.

நான்கு பேருக்கு மத்தியில் பேசுவதற்கும், மேடைப்பேச்சுகள் பேசுவதற்கும் கூச்சம், பயம், பதட்டம், வெட்கம் என எதற்கும் முன் வராமல் தயங்குகின்ற மாணவர்கள் அதிகமானோரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் எவ்வித பயம், பதட்டம், கூச்சம், வெட்கம் இன்றி சுதந்திரமாக செயற்படவைக்கின்ற ஒரே அரங்கு கூத்தாகும். கூத்து சுதந்திரமான பார்வையாளர்களையும், சுதந்திரமான நடிகர்களையும் கொண்ட அரங்காகும். நடிகர்களை இயல்பாக செயற்பட வைப்பதனால் எம்மில் உள்ள பலவீனமான வி;;டயங்கள் பலமடைகின்றன.
பாடசாலை மாணவர்களிடையே இடம்பெறுகின்ற சிறுசிறு பிரச்சினைகள் பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்னும் தீராப்பிரச்சினைகளாக வளர்ந்து சென்று கொண்டிருப்பதனை நாம் கண்டிருக்கின்றோம். அதேவேளை நாமும் அதனை அனுபவித்திருப்போம். ஆனால் இவ்வாறான சிறு சிறு பிரச்சினைகளை, ஏன் பரம்பரை பிரச்சினைகளையும் கூட கூத்து சாதாரணமாக தீர்த்து வைத்த சந்தர்ப்பங்களும் உள்ளன. உதாரணமாக இருவருக்கிடையில் பேச்சி இல்லை எனில் இருவரும் கூத்தில் இணைந்து செயற்படுகின்ற போது படிப்படியாக தம்மையறியாது இயல்பாகவே பேசிவிடுவர். கிராமத்துக்கு கிராமம் இடம் பெற்ற தீராப் பகைகளையும் கூத்து மாற்றியமைத்த சரித்திரங்களும் உள்ளன. ஆனால் இவை திட்டம் போட்டோ, கட்டாயத்தின் பெயரிலோ இடம்பெறுவதில்லை. இயல்பாகவும், எதார்த்தமாகவும் இடம்பெறுகின்ற சம்பவங்களே இவை.
ஊனக் கண் கொண்டு கூத்தினை பார்த்தால் அது எமது வாழ்க்கைக்கும், கல்விக்கும் முரணானதாகத்தான் தெரியும் கூத்தர்களுடனும் கூத்து சார்ந்த சமூகத்துடனும் இணைந்து களத்தில் இறங்கி செயற்பட்டால்தான் அதன் பூரண நன்மைகள் எமக்கு புரியும். கூத்திற்குள் இவ்வளவு படிப்பினைகள் உள்ளனவா? என்று. கூத்து எமக்கு ஒன்றும் செய்யவில்லை! ஒன்றும் செய்யவில்லை! என்றால் அதனைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் ஒன்று கூடவேண்டும்?.

அப்படியானால் கூத்து எமது வாழ்க்கைக்கு ஏதோ ஓர் விடயத்தினை கற்றுக்கொடுக்கின்றது என்றுதானே அர்த்தம். என்னைப் பொறுத்தவரை கூத்தும் ஓர் பள்ளிக்கூடம் பாடசாலை கற்றுத்தராத, பாடசலைக் கல்விக்குத் துணையான விடயங்களை கூத்து எமக்கு கற்றுத் தருகின்றது. இவை எல்லாம் தூரத்தில் நின்று பார்த்தால் எமக்குத் தெரியாது. அனுபவித்தால்தான் அவை எமக்குப் புரியும். கூத்து சார்ந்து தவறான மனப்பதிவுகளைக் கொண்டிருக்கின்றவர்களுக்கு ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் “ நீங்கள் கூத்துப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை கூத்தின் வளர்ச்சிக்கும், கலைஞர்களின் ஆசைக்கும் இடைஞ்சலாக இருந்து விடாதீர்கள்!!!!!!!”
 
ஆக்கம்:-
          வன்னியசிங்கம் – வினோதன்.
நுண்கலைமானி 
முனைக்காடு
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |