தம்புள்ள ரண்கிரி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வடமேல்மாகாகண கிரிக்கட் சம்மேளனத்தின் இவ்வருடத்துக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மாத்தளை மாவட்ட அணி வெற்றி பெற்றது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்ற 12 ஓவர்களைக் கொண்ட இந்த வன்பந்துக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில், இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட அணியும், மூன்றாவது இடத்தை பொலநறுவை அணியும் பெற்றுக் கொண்டன.
இப் போட்டியில் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், பொலநறுவை, மாத்தளை உள்ளட்ட மாவட்ட அணிகள் மோதிக் கொண்டன. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் யாழ்ப்பாணம் மற்றும் திருமலை மாவட்ட அணியினரை வெற்றிகொண்டனர்.
இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு மற்றும் மாத்தளை அணிகள் தெரிவாகின.
அதனையடுத்து நேற்றைய தினம் 4 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில் மாத்தளை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 74 ஓட்டங்களை 4 விக்கட்டுக்களை இழந்து பெற்றனர்.
இப் போட்டியில், சிறந்த பந்து வீச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட அணியின் தலைவர் ஜெ.சஞ்சீவ் தெரிவானார். சிறந்த துடுப்பாட்டம் மற்றும் ஆட்ட நாயகனுக்கான பரிசினை மாத்தளை அணியின் லகுறு மதுசங்க பெற்றுக் கொண்டார்.
இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்ற போது, தம்புள்ள மேயர் ஜாலிய ஒபேரா, வடமேல் மாகாண கிரிக்கட் சங்கத்தின் தலைவர் அசித்த கம்லத், வடமேல் மாகாண கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் என்.பி.ரஞ்சன், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் விவேகானந்தா பிரதீபன், உப தலைவர் எஸ்.சண்முககேசகர், உப செயலாளர் எஸ்.முரளிதரன், யாழ் மாவட்ட தலைவர் ஆர்.சந்திரநாதன், வடமேல்மாகாண கிரிக்கட் சங்கத்தின் பொருளாளர் டப்ளியூ. வலிசுந்தர, கிழக்கு மாகாண பயிற்றுவிப்பாளர் மஞ்சுள கருணாரத்ன, மட்டக்களப்பு மாவட்ட பயிற்றுவிப்பாளர் ஜனாப் அன்வர்டீன், தம்புள்ள மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிடோர் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
கிரிக்கட் சுற்றுப் போட்டியில், முதலிடம் பெற்ற மாத்தளை மாவட்ட அணிக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயமும் 15ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. 2ஆம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு சான்றிதழ்கள், வெற்றிக் கேடயம், 10ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. அதே போன்று 3ஆம் இடம் பெற்ற பொலநறுவை மாவட்ட அணிக்கு சான்றிதழ்களும், 5ஆயிரம் ரூபா பணப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.
இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய அணிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 வீரர்கள் விரைவில் கொழும்பில் உள்ள கழகங்களுடன் போட்டியிடுவதற்கும் அதன் மூலம் தேசிய அணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் தம்புள்ள ரண்கிரி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் விளையாடி 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை இதுவே முதல் தடவையாகும்.
0 Comments