Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு நகரில் பிரபல பாடசாலை அதிபர், ஆசியர்களுக்கு எதிராக மாணவர்களும், பெற்றோரும், வீதியில் இறங்கிப் போராட்டம்

மட்டக்களப்பு நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை 7.15 தொடக்கம் 8.00 மணிவரையில் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தகுதி இல்லாத அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்று என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டதோடு, மேற்படி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் தடையாக இருப்பதாகவும் தற்போதைய அதிபரின் நடவடிக்கையால் பாடசாலையின் கல்வி சீரழிந்து செல்வதாகவும், எந்த முன்னேற்றத்தையும் காணவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஆளுமை இல்லாத அதிபர் வேண்டாம், திறனற்ற அதிபர் வேண்டாம், மாணவர்களை புறந்தள்ளும் அதிபரை நிறுத்து போன்ற அதிபருக்கு எதிரான சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுலசிங்கம் ஆகியோர் பெற்றோருடன் கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாடசாலையினுள் செல்லுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.நிலாகரன், அதிபரை இடம்மாற்றுமாறு வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. பாடசாலையில் மாணவர்கள் தூங்கும் நிலையே உள்ளது. கடந்த காலத்தில் இருந்த நிலை பின்நோக்கி செல்கிறது. அதிபர் ஆசிரியர்களை சரியான முறையில் கண்காணிப்பதில்லை. ஒரு சில ஆசிரியர்களை வைத்துக் கொண்டு சிரேஸ்ட ஆசிரியர்களை பின்தள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என்றார்.
இதேவேளை பாடசாலைக்கு வருகைதந்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பாடசாலை சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாடசாலை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். அதேபோன்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடி மகஜர் ஒன்றினை வழங்குமாறு பெற்றோரிடமும் பணிப்பாளர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments