Home » » ஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெருமை மட்டக்களப்பு மாவட்டத்தையே சாரும்.

ஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெருமை மட்டக்களப்பு மாவட்டத்தையே சாரும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான விடயங்களை பாதுகாத்து அவற்றனை பேணவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
புதிய ஆணையாளராக உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக கடமையேற்ற பின்னர் குழுவாக இணைந்து சிறந்தமுறையில் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.பல் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார்.இவர் மூலம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாநகரம் வளம் பெறும் என்பதில் எமக்கு நம்பிக்கையுள்ளது.
மட்டக்களப்பு என்பது தனித்துவமான பிரதேசமாகும்.இலங்கையில் தனித்தீவினை தலை நகரமாக கொண்ட ஒரேயொரு மாவட்டமாகவும் இந்த மட்டக்களப்பு மாவட்டமே உள்ளது.ஆங்கிலேயர்களினால் கூட வெனிஸ் நகரத்துடன் மட்டக்களப்பு மாவட்டம் ஒப்பிடப்பட்ட ஒரு மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தில் அழகு பொருந்திய பல வனப்புகள் இருக்கின்றன.அவற்றினை பாதுகாத்து தற்கால மாற்றங்களுக்கு ஏற்ப அவற்றினை பாதுகாக்கவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த துறை ஊடாக நாங்கள் வருமானமீட்டகூடியதாக மாறவேண்டும்.எமது பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை மிகவும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.அந்த வகையில் நாங்கள் மாவட்டத்தில் உள்ள வனப்புமிக்க பகுதிகளை பாதுகாக்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தனித்துவங்கள் உள்ளன.மட்டக்களப்பு வாவியினை சார்ந்த கல்லடிப்பாலம்,தனித்துவமான மட்டக்களப்பு கோட்டை,சீமைப்பனைகள் இந்த பனைகள் போர்த்துக்கீசரால் இங்கு கொண்டுவரப்பட்டது.அடுத்தது பாடுமீன்.இந்த நான்கும் தனித்துவமானது.இவை நான்கும் மட்டக்களப்பு மாநகரசபைக்குள்ளேயே வருகின்றது.எதிர்காலத்தில் இவற்றினை பாதுகாப்பது தொடர்பிலான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொள்ளும் என நம்புகின்றேன்.
போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன்றவர்களின் ஆட்சிகளுக்கு உட்பட்டு தற்காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பல மாற்றங்களை கண்டுவருகின்றது.
எந்த நிறுவனத்திற்கும் குழு வேலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது.அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களும் ஊழியர்களும் மேற்கொண்டுவரும் இந்த குழு வேலைப்பாடு பாரிய வெற்றிகளை ஏற்படுத்தும்.
எதிர்காலத்தில் இந்த மாநகரசபைக்கு பல கடமைகள் உண்டு.அந்த பணிகளுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினையும் உள்வாங்கி பணிகள் மேற்கொள்ளமுடியுமென்றால் நாங்களும் உதவுவதற்கு தயாராகவிருக்கின்றோம்.
ஏனென்றால் இந்த மாவட்டத்துக்கு போர்த்துக்கீசர் வரும்போது தமது குதிரைகளுக்கு உணவளிப்பதற்காக இந்த சீமைப்பனைகளை கொண்டுவந்தார்கள்.இது தனித்துவமானது.உலகில் எங்கெல்லாம் போர்த்துக்கீசர் ஆட்சி இருந்ததோ அங்கெல்லாம் அவர்களின் அடையாளமாக இந்த சீமைபனைகள் உள்ளன.இதுவொரு வரலாற்று சான்று.அதனைப்பேணிபாதுகாக்க மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரீச்சை மரங்கள் காய்க்கின்றன.தற்போதுதான் இங்கும் பேரீச்சை மரங்கள் வளரும் என அடையாளப்படுத்தப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |