அளுத்கம- பேருவளை- தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்து 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு அளுத்கம பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பேரணி கூட்டத்தை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதோடு பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பதற்ற நிலையை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் அளுத்கம- பேருவளை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடங்களுக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் கண்ணீர் வடித்துள்ளார்.
தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து தங்களுடைய மக்களை பாதுகாக்க முடியாது போனதாகவும் அதனையிட்டு வெட்கப்படுவதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர அரசாங்க தரப்பில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டு அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கான தமது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments: