Home » » பாகிஸ்தான் - கராச்சி விமான நிலையம் மீதான தலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் - கராச்சி விமான நிலையம் மீதான தலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

ஞாயிறு இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள விமான நிலையத்தின் மீது TTP எனப்படும் பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் தீவிரவாதிகள் தொடுத்த பயங்கரத் தாக்குதலில் 28 பேர் கொல்லப் பட்டும் மேலும் 24 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையமே பாகிஸ்தானின் மிகப் பெரிய மற்றும் மிக பரபரப்பான விமான நிலையம் ஆகும். இத் தாக்குதலை அடுத்துக் கருத்துத் தெரிவித்த TTP தலிபான் தளபதி அப்துல்லா பஹர், வடக்கு வஷிரிஸ்டானில் நவம்பரில் அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்ட தமது முன்னால் தளபதியான ஹக்கிமுல்லா மெஹ்சுட்டின் மரணத்துக்குப் பழி வாங்கும் முகமாகவே விமான நிலையம் மீது தாக்குதல் தொடுத்ததாகவும் இதே போன்ற தாக்குதல்கள் இனியும் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
ஞாயிறு இரவு வர்த்தக ரீதியிலான விமானங்கள் டேக் ஆஃப் ஆகும் பிரதேசத்தில் இருந்து கிட்டத்தட்ட 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையத்தின் கார்கோ பகுதியில் துப்பாக்கிகள், கிரைனேட்டுக்கள் மற்றும் தற்கொலை அங்கிகளுடன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் 5 மணி நேரத்துக்குத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் கொல்லப் பட்டவர்களில் 8 பேர் விமான நிலைய பாதுகாப்புப் படையினரும் 2 ஊழியர்களும் ஒரு றேஞ்சரும் அடங்குவர். விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் 8 தீவிரவாதிகளும் தமது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்ததில் 2 தீவிரவாதிகளும் பலியாகினர். இத்தாக்குதல்களில் விமானங்கள் எதுவும் சேதமடையவில்லை என்றும் ஆனால் ஓர் கட்டடம் தீக்கிரையாகியது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபஃப் இத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் தீவிரவாதிகள் இன்னமும் பெரிய திட்டங்களைக் கொண்டிருக்கலாம் என்றும் பாதுகாப்புப் பலப் படுத்தப் படும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை கராச்சி விமான நிலையத் தாக்குதலை அடுத்து மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு புறம் ஞாயிற்றுக் கிழமை ஈரானில் இருந்து பஸ் வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்த யாத்தீரிகர்களை பாகிஸ்தானின் பலோகிஸ்டான் மாநிலத்தில் வைத்துத் தடுத்து ஜைஸ் உல் இஸ்லாம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 23 யாத்திரீகர்கள் கொல்லப் பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |