Advertisement

Responsive Advertisement

தமிழ் மக்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது கிழக்கு மாகாணசபை! - இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்துச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண சபையினால் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். மட்டக்களப்பு -4 அம்பாறை-4 மற்றும் திருகோணமலை- 2 என்ற எண்ணிக்கையில் மாகாணத்தில் 10 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் 18 சதவீதமான தமிழர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் கிராமங்களும் உள்ளடக்கப்படவில்லை என்றும் 3 முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்கள கிராமமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துரைரெத்தினம் கூறுகின்றார்.கடந்த ஆண்டிலும் அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விகிதாசாரத்தின்படி, 3 தமிழ் கிராமங்களும் ஒரு முஸ்லிம் கிராமமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இரண்டு முஸ்லிம் கிராமங்களும் இரண்டு தமிழ் கிராமங்களும் அங்கு அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
கடந்த ஆண்டு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டியபோது, இந்த ஆண்டு அப்படி நடைபெறமாட்டாது என்று முதலமைச்சர் உத்தரவாதம் வழங்கியிருந்த போதிலும் அது மீறப்பட்டுள்ளதாகவும் துரைரெத்தினம் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

0 Comments