Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் வயதினர் மத்தியில் போதைப்பழகம் அதிகரித்து செல்கின்றது –மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் வயதினர் மத்தியில் போதைப்பழகம் அதிகரித்து செல்கின்றது –மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் வயதினர் மட்டத்தில் அண்மைக்காலமாக போதைபாவனை அதிகரிதுள்ளதாகவும் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்காற்றவேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
நிறைவான இல்லம் வளமான தாயகம்' என்ற தொனிப்பொருளின் கீழ், மக்களை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்ட இடம்பெயர் சேவை மண்முனைப்பற்று  பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி தவராஜா தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்குஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'இலங்கையில் அதிகூடியளவான மதுப்பாவனையை உடையதாக  மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இதனால், அதிகளவு நிதியை திறைசேரிக்கு அனுப்புவதும் மட்டக்களப்பு மாவட்டமே. போதைப்பொருள் பாவனையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்களே அதிகளவில்  அடிமையாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்விதம் பல சமூகப் பிரச்சினைகள் இம்மாவட்டத்தில் உள்ளன. இவற்றில்  சில சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற கிராமங்களும் உள்ளன.
இது தொடர்பில்  அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எந்தளவுக்கு முயன்றாலும்,  இங்கு வாழ்கின்ற மக்கள் குறிப்பாக, குடும்பப் பாரத்தைச் சுமக்கின்ற பெண்கள் இது பற்றி மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டும்.
உங்களது குடும்பப் பொருளாதாரம் வளமானதாக மட்டுமன்றி, நீங்கள்  தேகாரோக்கியமானவர்களாகவும் மாற வேண்டும். எதிர்காலத்தில் எல்லா வளங்களும் சிறப்பாகப் பெற்ற சிறந்த இளைய சமுதாயத்தை விட்டுச் செல்கின்ற சமூகமாக இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வை மாற்ற வேண்டும்.

இவ்வாறான மாற்றத்தைக் காணவேண்டுமானால், பெண்கள் விழிப்புடன் வலுப்பெற வேண்டும். பெண்களே குடும்பப் பொருளாதாரத்தின் மையம். பெண்களை பிரதான மையப் பொருளாகக்கொண்டே ஒவ்வொரு குடும்பமும் வாழ்கின்றது. இந்நிலையில்,  இதனை எல்லோரும் பக்குவமாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.
பெண்களை வலுப்படுத்துகின்ற பல செயற்றிட்டங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாகவும் சமுர்த்தி போன்ற திட்டங்களூடாகவும் ஏனைய நிதி வழங்கும் நிறுவனங்களூடாகவும் செய்து  வருகிறோம்.
இவ்வாறு வறுமையை போக்கி பொருளாதார முன்னேற்றத்துக்கு  வழிகாட்டினாலும், இதை  மக்கள் ஒருபுறம் வைத்துவிட்டு அதிக வட்டி அறவிடுகின்ற நிதி நிறுவனங்களை நாடிச்சென்று அதிக வட்டியெனக் கூடச் சிந்திக்காது நிதியை பெறுகின்ற மனோநிலை பொதுவாக மக்களிடம் காணப்படுகிறது. மேலும், தங்களது முதலீடுகளை அநாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  இதனால் கடன் பளு, வறுமை, ஆரோக்கியமற்ற நிலைமைக்கு உள்ளாகி  கடைசியில் தற்கொலையில் தங்களது வாழ்வை முடிக்கின்ற விரக்திக்குச் செல்கின்றனர். இவ்விதம் புதிது, புதிதாக பல சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன.
சமுர்த்தி வங்கியில் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறக்கூடிய வசதி வாய்ப்புகள் உள்ளன. இதை விட, தற்போது 'வாழ்வின் எழுச்சி' திட்டமூடாக சமுர்த்திப் பயனாளிகள் அல்லாதவர்கள் கூட 500,000 ரூபா வரை தொழிற்றுறைக்காக கடன்  பெற முடியும். இதை விட கிராமிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவை, பல்வேறு வாழ்வாதார கைத்தொழில்களுக்காக இலகு முறையில் நிதி வசதியளிக்க முன்வந்துள்ளன. இவ்வாறான வசதிகளை பயன்படுத்தி நீங்கள் குடும்பப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குச் சிந்திக்க வேண்டும்.
மட்டக்களப்பு நகரில் பல நல்ல முன்னேற்றங்களுக்கான சிறந்த உதாரணங்களுள்ளன. இந்நிலையில், பாரம்பரிய உணவுகளை தயாரித்து விற்பதில்; தங்களது முயற்சியை தொடங்கியவர்கள்  வெற்றி கண்டுள்ளனர்.  இம்முயற்சியில் ஒருவருடத்தை அவர்கள் பூர்த்தியாக்கிய  நிலையில், அவர்கள் பட்ட கடன்களையெல்லாம் அடைத்து முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களைக் கூட  கொள்வனவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பெண்ணொருவரை நான் சந்தித்தேன், அவர் தனது சுயதொழில் முயற்சியில்; கடந்த 06 மாதங்களில்   60,000 ரூபாவை இலாபமாகப் பெற்று அதை வங்கியில் சேமிப்புச் செய்ததை அறிந்தேன்.  முன்னேறத் துடிப்பவர்களுக்கு இது  சிறந்த உதாரணம்.

பெண்கள் ஆக்கபூர்மாகச் சிந்தித்தால், குடும்பத்தினதும் சமூகத்தினதும் அபிவிருத்தியென்பது அருகிலிருக்கும் அடையக்கூடிய சிறந்த கனவுவென்பதில்  சந்தேகமில்லை.  உங்களின் முன்னேற்றத்துக்காக தற்போது உங்கள் கிராமங்களுக்கு வரும் எங்கள் அதிகாரிகள், இனிமேல் உங்கள் வீடுவீடாக வருவார்கள்.  உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் எந்நேரமும் தயாராகவுள்ளோம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் தேவை' என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்  ஜனாதிபதியின் ஆலோசகருமான  சிவனேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.
இந்த இடம்பெயர் சேவையில் பிரதேச செயலகம், பொலிஸ், தபால் அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காணி, விவசாயத் திணைக்கம், ஆயுர்வேத வைத்தியத் தேவைகள், நகரசபை உள்ளிட்ட தங்களது அத்தனை அலுவல்களும் முன்னெடுக்கப்பட்டன.

                
           
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |