காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற காதலனின் சித்தி கைது செய்யப்பட்டார். மேலும் கைதான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொடூர சம்பவம் மண்டியா அருகே நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் மேட்டுஹள்ளி அருகே பைரவேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் ஷில்பா (வயது 19). இவர், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அபிஜித் (28) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு அபிஜித்தின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய ஷில்பாவும், அபிஜித்தும் கடந்த ஜனவரி மாதம் 1–ந்தேதி மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அபிஜித்தின் சித்தப்பா புட்டசாமியும், அவரது மனைவி பிரமிளாவும் அடைக்கலம் கொடுத்து தங்கள் வீட்டிலேயே தங்கவைத்தனர். ஒரு மாதத்திற்கு பின்னர் புட்டசாமி அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் காதல் தம்பதியை குடி அமர்த்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அபிஜித் வேலைக்காக சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஷில்பாவை மைசூர் மாவட்டம் நரசிபுரா அருகே உள்ள முடுக்கு தொரேவில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம் என்று புட்டசாமியும், பிரமிளாவும் அழைத்தனர். பின்னர் ஷில்பாவுக்கு தங்க நகைகளை அணிவித்து இருவரும் ஒரு காரில் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு சாமி தரிசனத்தை முடித்த 3 பேரும் அதே காரில் மண்டியா மாவட்டம் மலவள்ளி வழியாக மைசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரை ஓட்டிச் சென்ற புட்டசாமி மலவள்ளி– மைசூர் மெயின் ரோட்டில் கன்னஹள்ளி கிராமம் அருகே திடீரென்று காரை நிறுத்தினார். அப்போது திடீரென்று புட்டசாமியும், பிரமிளாவும் சேர்ந்து ஷில்பாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய ஷில்பா காரில் இருந்து இறங்கி ரோட்டில் வேகமாக ஓடினார்.
அவரை பின் தொடர்ந்து புட்டசாமியும், பிரமிளாவும் ஓடியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய ஷில்பா சாலையில் இருந்த பள்ளத்தில் கால் தவறி விழுந்தார். அப்போது அங்கு வந்த புட்டசாமியும், பிரமிளாவும் ஷில்பாவின் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து ஷில்பாவின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றனர். ஆனால் அவர்களை தள்ளிவிட்டு அவர் கூச்சல் போட்ட படியே ஓடினார். அவரை விடாமல் துரத்தி பிடித்த புட்டசாமியும், பிரமிளாவும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் உடலில் தீக்காயமடைந்த ஷில்பா அலறியபடியே கன்னஹள்ளி கிராமத்தை நோக்கி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஷில்பாவை மீட்டு சிகிச்சைக்காக மண்டியா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக இறந்துபோனார்.
முன்னதாக இதுபற்றி தகவல் அறிந்ததும் சிருகாவலு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷில்பாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது தான் காதலித்து திருமணம் எனக்கு அடைக்கலம் கொடுப்பது போல் நடித்து பிஜித்தின் சித்தப்பா புட்டசாமியும், அவரது மனைவி பிரமிளாவும் தன்னை தீவைத்து எரித்ததாக தெரிவித்தார்.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார், ஷில்பாவை நிர்வாணப்படுத்தி உயிருடன் எரித்துக்கொன்றதாக பிரமிளாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான புட்டசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அதே போல் ஷில்பாவின் காதல் கணவர் அபிஜித் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. எனவே அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மண்டியா மற்றும் மைசூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
0 Comments