Home » » மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்குக் கடிதம்

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்குக் கடிதம்

மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் கீழ் வரும்  செங்கலடி மத்திய கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்குமாறு கேட்டு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியானது இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்ற 1AB தரப் பாடசாலையாகும். சட்டப்பிரகாரம் இப்பாடசலையின் அதிபர் பதவிக்கு SLEAS - III அல்லது SLPS - I  தகைமையுடைய ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும்.
எனினும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளரினால் செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக குறைந்த பட்சத் தகுதியாக SLPS - 2(I)  கொண்ட விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 4 - 7 - 2013, மற்றும் 6 - 1 -2014 ஆகிய தினங்களில் கோரப்பட்டன.
இதற்கான நேர்முகத் தேர்வு 07 - 04 - 2014 அன்று திருகோணமலை மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் தோற்றிய விண்ணப்பதாரிகள் மூவரும் (தற்போதைய அதிபர் உட்பட) SLPS - 2(II) தரத்தினை உடையவர்களே.
இத்தேர்வின் மூலம் ஒரு விண்ணப்பதாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் நாங்கள் அறிகின்றோம். எமது பாடசாலையின் அதிபர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டவர் ஏற்கனவே தான் பதவி வகித்த பாடசாலையில் சிறப்பாகச் செயலாற்றவில்லை. இவர் எமது 2003ஃ04 காலப்பகுதியில் எமது பாடசாலையில் கல்வி கடமையாற்றியுள்ளார். இவர் பாடசாலை நிருவாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என்றும் நாங்கள் அறிகின்றோம்.
1AB தரப் பாடசாலைக்கு குறைந்தபட்சத் தகுதியாக SLPS-2(I) கொண்ட விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், SLPS-2(II)  கொண்ட ஒருவரையே மீண்டும் தெரிவு செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்பதனைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
மேலும் கடந்த வருடம் நியமிக்கப்பட்ட தற்போதைய அதிபர் கே. அருணாசலம் SLPS-2(II) தராதரமுடையவர். எமது பாடசாலையில் அதிபராக கடமையாற்றியதால் அவரும் அப்பதவிக்கு விண்ணப்பித்தார். அவர் எமது பாடசாலையில் தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கவும் செய்துள்ளார்.
இறுதியாக வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவின் படி வரலாற்றில் முதன்முறையாக எமது பாடசாலை கல்குடா கல்வி வலயப் பாடசாலைகளிடையே முன்னணியில் திகழ்கின்றது. இது அவருடைய சிறந்த சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.  
ஆகவே பொருத்தமான தகமைகளையுடைய அதிபர் நியமிக்கும் வரை தற்போதைய அதிபரான கே. அருணாசலத்தை எமது பாடசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ள இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |