மாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் தேதி திடீரென காணாமல் போனது. அதில் 12 ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமானது தெரிய வந்தது. விசாரணையில், விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் திட்டமிட்டு அணைக்கப்பட்டதும், விமானம் திசை மாறி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது. விமானம் மாயமானதில் ஏதோ மர்மம் இருக்கிறது. விமானத்தை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சீன அரசும், விமானத்தில் சென்ற 156 சீன பயணிகளின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர். இவ்வாறு ரஷ்ய உளவு துறையினர் தெரிவித்துள்ளதாக டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் நிலையில், விமான பயணிகள் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments