Home » » சர்வதேசத்துக்கு அடிபணிந்துவிட முடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேசத்துக்கு அடிபணிந்துவிட முடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட தாய்த் திருநாட்டைக் காட்டிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சர்வதேசத்துக்கு அடிபணிந்துவிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அழுத்தங்களுக்கு பதில் கொடுக்க எமது மக்கள் தயாராக வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
வெளிநாட்டுத் தூதரகங்களின் பணத்தைப் பெற்று செயற்படுவோர் நாட்டில் ஜனநாயகமில்லை, சுதந்திரமில்லை என பிரசாரம் செய்கின்றனர். ஜனநாயகம் இல்லாமலா யாழ்ப்பாணத்தில் நாம் தேர்தல் நடத்தினோம். அரசாங்கம் தோற்றாலும் அந்த மக்களுக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதை கடமையாக்கிக் கொண்டு நாம் செயற்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கொடை பிரதேசத்தில் 47000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-
டி. பி. இலங்கரத்னவின் 101வது நினைவு தினம் நினைவு கூரப்படும் நாளில் இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இங்கிருந்த பழைய தண்ணீர்த் தாங்கி கோபுரத்தை இலங்கரத்ன அவர்கள் நிர்மாணித்ததால் அதற்கு 17 வருடங்கள் நீர் நிரப்பப்படவில்லை. இங்குள்ள மக்கள் அதனை அறிவர். சிலர் இதனை மறுத்துள்ளனர்.
அதனையடுத்து 17 வருடத்திற்குப் பின்னர் நாம் பதவிக்கு வந்தே இத் தாங்கியில் நீர் நிரப்பினோம். அது இப்பகுதி மக்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவில்லை. அதனால் இப்பகுதியிலுள்ள அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள் எம்மிடம் இது பற்றிக் கூறினர்.
இதற்கிணங்க நாம் வெளிநாடொன்றின் கடன் உதவியுடன் மீள பாரிய நீர்த்தாங்கி யொன்றை நிர்மாணித்து புதிதாக இந்த குடிநீர்த்திட்டத்தைத் தற்போது ஆரம்பித்து வைத்துள்ளோம். இனி இப்பகுதி மக்களுக்குத் தடையில்லாமல் தொடர்ந்து குடிதண்ணீர் கிடைக்கும். ஜப்பான் அரசாங்கம் எமக்கு இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது.
சிலர் நாம் வெளிநாடுகளில் கடன் பெறுவதாக விமர்சிக்கின்றனர். இத்தகைய அத்தியாவசிய அபிவிருத்திக்காகவே நாம் கடன் பெறுகிறோம் என்பதை மக்களுக்குக் குறிப்பிடவிருப்புகிறேன். இது போன்ற அபிவிரத்திகளை நடும் கைவிட்டிருக்க முயடிம் எனினும் மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக்கொடுன்ன எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
மக்கள் 17 வருடங்கள் துன்பகரமான வாழ்க்கையையே மேற்கொண்டனர். செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து பிரயோசனம் பெறப்படவில்லை. எனினும் இனி 24 மணித்தியாலமும் மக்கள் தண்ணீரைப் பெறமுடியும்.
மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட்டு வருகின்றது. ஒரு லீற்றர் தண்ணீரை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் 40 ரூபாவை செலவிடுகிறது. எனினும் சாதாரண மக்களுக்கு 4.50 அல்லது 5 ரூபா¡வுக்கே நாம் குடிநீரை வழங்குகிறோம். நாட்டில் 45 வீதமான மக்களுக்கு நாம் தற்போது வீடுகளுக்கு குழாய்கள் மூலம் நீர் வழங்குகிறோம். 2016ற்குள் இதனை நாம் 70 வீதமாக அதிகரிப்பதே எமது இலக்கு.
இது போன்றே மின்சார விநியோகமும் இடம்பெறுகிறது. 100ற்கு 98 வீதமான மக்களுக்கு நாம் மின்சாரம் வழங்குகிறோம். நகர்ப்புற மக்கள் மட்டுமே பெற்று வந்த வரப்பிரசாதங்களை நாம் கிராம மக்களுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
உரமானியம் வழங்குவது வெளிப் படையாக அனைவரும் அறிந்த விடயம். எனினும், இது போன்ற திட்டங்களால் மக்கள் மீதான சுமையை அரசாங்கம் சுமக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீர், மின்சாரம், உர மானியம் போன்ற மக்கள் தேவைகளை நாம் நிறைவேற்றுகின்றோம். நாம் செய்ய வேண்டியதும் இதுவே. வரப்பிரசாதங்களை ஒரு சாரார் மட்டும் அனுபவிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. மக்களின் சுமைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. அரசு என்பது மக்களே. அதனால்தான் நாம் இவ்வாறு செயற்படுகிறோம்.
முழு உலகமும் எதிர்காலத்தில் தண்ணீருக்கான பாரிய நெருக்கடியை சந்திக்கவுள்ளதை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் நீரை மிக சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். நம்மில் பலர் பூஞ்செடிகளுக்கு ஊற்றுவதும் கார் கழுவுவதற்கு உபயோகப்படுத்துவதும் இந்த 40 செலவு செய்யப்படும் தண்ணீரிலேயே என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகையில் பாதைகள், பாலங்கள் அமைப்பது அபிவிருத்தியில்லை என விமர்சிக்கின்றனர். நாம் மக்களுக்கான தேவையை நிறைவேற்றி வருகையில், பலர் பல பகுதிகளிலிருந்தும் எமக்கு சேறுபூசும் விதத்தில் செயற்படுகின்றனர்.
மூன்று தசாப்தங்களாக நாட்டைச் சீரழித்த யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். எனினும் அதற்கெல்லாம் நாம் தற்போது ஜெனீவா நாட்டுக்குப் பதில் கூற நேர்ந்துள்ளது. நாம் ஜெனீவாவிற்குப் பதில் கொடுப்போம். நாம் பதில் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவர்கள் நினைத்ததை அவர்கள் செய்வார்கள் என்பதை நாம் அறிவோம். எனினும் இதை வைத்து சில சக்திகள் பாரிய அச்சத்தைத் தோற்றுவித்து வருகின்றனர்.
நாடு முழுவதிலும் பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். படிப்படியாக மக்களை அச்சத்துக்குள்ளாக்கி மக்களை வீதிக்கு இறக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். அதுவே அவர்களின் எதிர்பார்ப்பு. நான் ஜெனீவா போயிருந்த போது கியூபாவுக்கு எதிராக 60 தடவைகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கியூபா ஜனாதிபதி என்னிடம் கூறினார்.
அதேபோன்று இஸ்ரேலுக்கு எதிராகவும் இதுபோன்றே இடம்பெற்றுள்ளது. அந்நாட்டுக்கு எதிராகவும் 65 தடவைகளுக்கு மேல் ஜெனீவா மனித உரிமைப் பேரவை குற்றஞ் சுமத்தியுள்ளதை அறிய முடிகிறது. அதனால் ஐ. நா. அமைப்பிலிருந்து அந்நாடு விலகி விட்டதாக அந்நாட்டுத் தலைவர் தெரிவித்தார்.
இதனால் ஜெனீவா எதனைச் செய்தாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. இதனை நான் சரி என்று கூறி அங்கீகரிக்க முடியாது. எனினும் இதுதான் தற்போது உலக நாடுகளில் உள்ள நிலைமை. எமக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் வரும். கடந்த வருடமும் கொண்டு வரப்பட்டது. இந்த வருடமும் கொண்டு வருவர். எனினும் எம்மில் சிலர் இதனைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதில் சொல்ல வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
சர்வதேச அழுத்தங்களுக்குப் பதில் கொடுக்க எமது மக்கள் தயாராக வேண்டும். நாம் அடிபணிந்துவிட முடியாது. இப்பிரதேச மக்களும் அன்று பறங்கியருக்கெதிராக மேற்கொண்ட மோதலை நாம் அறிவோம். இத்தகைய பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட நாட்டை காட்டிக் கொடுக்க இடமளிக்க முடியாது. இந்தப் பிரதேச மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுக்க முன்னின்று உழைத்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஏனைய அனைவருக்கும் நன்றி பாராட்டுகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |