மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்,
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தில் அதிகளவினா நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு வான் கதவுகள் அரை அடி திறக்கப்பட்டுள்ளன.இதேபோன்று மாதுறு ஓயா ஆறும் முந்தானை ஆறும் பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி,கிராண்,ஓட்டமாவடி,வாழைச்சேனை ஆகியவற்றின் சில பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் அபாயம் உள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
முந்தானையாறு வெள்ளம் கடலில் கலக்கும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு குறித்த பகுதிகளின் பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர்பில் குறித்த பகுதிகளில் பிரதேச செயலாளர்கள் அறிவிப்புகளை வழங்குவார்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments