பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சாலைக்கு அருகில் நேற்று (14) மாலை 5.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஒருவர் படுகாயத்துக்குள்ளாகினார்.
பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனமும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுமே மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. பிக்கப் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி வீதி ஒரத்தில் நின்றவரையும் தாக்கியதன் பின்னர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிக்கப் வாகனத்தை செலுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அக்கரைப்பற்றை சேர்ந்த டி.சுமன், வீதி ஒருத்தில் நின்றுகொண்டிருந்த மில் ஒன்றில் காலாளியாக கடமையாற்றும் இறக்காமத்தை சேர்ந்த உதுமாலெவ்வை ஆகிய இருவருமே மரணமடைந்தவர்கள். பிரேதங்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.சாதிக் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் மரணமடைந்த 30வயதுடைய தாசன் சுமன் கவிதை வடிப்பதில் புலமைபெற்றவர் என்பதுடன் தனது உறவினரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு அவருக்காக இறுதியான தனது அஞ்சலி கவிதையினையும் வடித்து இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக மயானத்திற்கு செல்லும் போதே இத்துயரச் சம்பவம் நடைபெற்றதாக உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
தாசன் சுமன்
0 Comments