சென்னையில் இருந்து சவுதிஅரேபியாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற நேபாள நாட்டு பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவிய ஏஜெண்டும் பிடிபட்டார். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக சவுதிஅரேபியாவுக்கு நேற்று விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
|
அப்போது நேபாள நாட்டை சேர்ந்த சிவிகா(வயது 25) மற்றும் நஞ்சிதா(23) ஆகியோரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் சவுதிஅரேபியாவுக்கு செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். உடனடியாக 2 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அவர்கள், சவுதிஅரேபியாவுக்கு வேலைக்கு செல்வதாகவும், தங்களுக்கு பாஸ்போர்ட்டு ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜெண்டான நேபாள நாட்டை சேர்ந்த அபிதேஷ்கர்(30) என்பவரும் தங்களுடன் விமான நிலையத்துக்கு வந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், விமான நிலையத்தில் இருந்த ஏஜெண்டு அபிதேஷ்கரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் நேபாளை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரையும் கைது செய்த போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
0 Comments