சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை செல்வதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதுவர், கபிரியெல்லா நவுல், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான ஐநாவின் முதல் சிறப்புத்தூதுவர் பரம் குமாரசாமி ஆகியோரும் இந்த பிரதிநிதிகள் குழுவில் அடங்குகிறார்கள்.
இந்தக் குழுவுக்கு முன்னதாக வழங்கப்பட்ட விசா பின்னர் காமன்வெல்த் மாநாட்டு காலகட்டத்துக்கு ரத்துச் செய்யப்பட்டது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் ஆகியவற்றால் கொழும்பில் நடத்த ஏற்பாடாகியிருந்த ”சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் குறித்த காமன்வெல்த் பெறுமானங்களை யதார்த்தமாக்கல்’ என்ற தொனிப்பொருளிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்தப் பிரதிநிதிகள் குழு கொழும்பு செல்ல திட்டமிட்டிருந்தது.
காமன்வெல்த் மாநாட்டை முன்னிட்ட ஏற்பாடு
சுமார் 200 சட்டத்தரணிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாடு கொழும்பில், காமன்வெல்த் மாநாட்டை முன்னிட்டு நவம்பர் 13 திகதி நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தமது அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இலங்கை தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டமை குறித்து தாம் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் இணைத் தலைவரான பரோன்ஸ் கெலனா கென்னடி அவர்கள் கூறியுள்ளார்.
தமது அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸ் அவர்கள் கூறி சில நாட்களுக்குள் இது நடந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால், இந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு கடந்த ஆகஸ்டு 28ஆம் திகதி விசா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், நவம்பர் மாதம் சட்டத்தரணிகளின் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், அக்டோபர் 20 ஆம் திகதி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரை அவர்களுக்கு இலங்கைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை துணைத்தூதுவர் நெவில் டி சில்வாவினால், சர்வதேச சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெவில் சில்வா தெரிவிக்கையில் , குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையில் காமன்வெல் மாநாடு நடக்கவிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் சட்டத்தரணிகளின் மாநாட்டுக்கு தேவையான அனுசரணையையும், உதவிகளையும் தம்மால் செய்ய முடியாது இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்
0 Comments