இலங்கை அதிபர் ராஜபக்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி காட்டமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் ஆகும்.
|
உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்று விட்டார்.இந்தப் புகழும், பெருமையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கிடைத்திருக்கும். அது எப்போது தெரியுமா? இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஒரு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காது என்று மன்மோகன் சிங் அறிவித்திருந்தால் அந்தப் புகழ் கிடைத்திருக்கும்.ராஜபக்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல இரண்டுங்கெட்டான் நிலையில், தான் (மன்மோகன் சிங்) செல்லவில்லை என்றும், சல்மான்குர்ஷித் தலைமையிலான குழு செல்லும் என்றும் பிரதமர் முடிவு எடுத்தார்.இந்த முடிவை எடுத்த போதாவது, இலங்கை அரசால் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில்தான் நான் (மன்மோகன் சிங்) மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் அறிக்கை விடுத்திருக்கலாம்.
ஆனால் டேவிட் கேமரூன், ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இலங்கை ராணுவம் செய்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்றும் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.இந்தப் பணியை மத்திய அரசு செய்திருந்தால், தமிழ்ச் சமுதாயம் நன்றி செலுத்தியிருக்கும். தமிழர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, மாநாட்டில் பங்கேற்ற சல்மான் குர்ஷித் செய்தது என்ன தமிழர்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறவில்லை. தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக மாநாட்டில் கர்ஜிக்கவும் இல்லை.சல்மான் குர்ஷித்துக்கு என்ன கவலை மாண்டதெல்லாம் தமிழ் மக்கள்தானே என்று கருணாநிதி கூறியுள்ளார்.
|
0 Comments