மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் அவரின் உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பிரதேச செயலகத்துக்குள் சென்று விகாரதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரர் பட்டிப்பளை பிரதேசத்தில் விகாரை ஒன்றை உடனடியாக பதிவுசெய்து தருமாறு கோரியுள்ளார்.
அதற்கு பிரதேச செயலாளர் நடைமுறை விடயங்கள் உள்ளது.அது தொடர்பில் பரிசீலனை செய்து பதிவுசெய்வதாகவும் உடனடியாக பதிவுசெய்யமுடியாது எனவும் கோரியுள்ளார். இதன்போது ஆத்திரமடைந்த தேரர் பிரதேச செயலாளரை கடுமையான தூசன வார்த்தைகளினால் பேசியுள்ளதுடன் அவரது மேசையில் இருந்த பொருட்களை இழுத்து வீசியுள்ளதுடன் பக்ஸ் இயந்திரத்தினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிரதேச செயலக ஊழியர்கள் ஒன்றுகூட தேரர் வெளியேறிச்சென்றுள்ளார். இதுதொடர்பில் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேரரின் அச்சுறுத்தலைக்கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments