எமது உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் சாதாரணமானவர்களுடன் போராட்டம் நடத்தவில்லை. நாட்டினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்துடன் போராடுகின்றோம். எனவே நினைத்தவுடன் எதனையும் செய்ய முடியாது. படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நில ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் மாவட்டபுரம் கந்தன் ஆலய முன்றலில் நடைபெற்று வரும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
|
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அத்துடன் பயங்கரவாதம் நாட்டில் அழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் இராணுவத்தினருடைய பிரசன்னம் வடக்கில் அவசியமற்றது. எனவே இவர்களது பிரசன்னத்தினால் சிவில் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. எனவே அவர்களை அரசாங்கம் மீள எடுக்க வேண்டும். மேலும் வலி,வடக்கு தொடர்பில் உள்ள மக்கள் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் என அனைத்து பிரச்சினைகளையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
அதன்படி குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றது. அதனை நாம் ஜனாதிபதி வரை அறிவித்துள்ளோம். நாம் தற்போது நாம் போராடிக் கொண்டிருப்பது சாதாரணமானவர்களுடன் அல்ல இராணுவத்தினருடனேயே. எனவே படிப்படியாக எமது நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இவ்வாறான போராட்டங்களே வலுச்சேர்ப்பதாக அமையும் எனவே இவ்வாறான ஆர்பாட்டங்களை நாம் உணர்வு ரீதியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் எமது நாடு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நிலையிலும் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்கள் அடக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர் எனவே உள்நாட்டில் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத சூழலில் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை சர்வதேச நாடுகளிடம் கூறிக்கொண்டிருக்கின்றோம். அதன்படி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எமது பிரச்சினைகளை தெளிவுபடுத்தியுள்ளோம். அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானியா பிரதமரிடமும் எடுத்துக் கூற இருக்கின்றோம்.
யுத்தத்திற்கு பின்னரான அரசின் அபிவிருத்தி என்றும் கூறும் போது வடக்கிற்கும் தெற்கிற்கும் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளமையினை மட்டுமே கூறிக்கொள்ள முடியும். ஏனெனில் இந்த வீதிகளை எமது மக்களை விட இராணுவத்தினரே அதிகம் பயனடைகின்றனர். விசேட அபிவிருத்தி என எதனையும் கூறிக் கொள்ள முடியாது. இதேவேளை இலங்கை அரசிற்கு அழுத்தத்தினைக் கொடுத்து வடக்கில் ஒரு தேர்தலை நடாத்துவதற்கு முன்னின்ற இந்தியாவிற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். எம்மாலான நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் எடுப்போம் என்றார்
|
0 Comments