தம்புள்ளை அம்மன் கோவில் தரை மட்டமாக்கப்பட்டமையானது இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதுடன் இதன் மூலம் முஸ்லிம்களுக்கும் பாரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது அதனை தாக்கியவர்களை கைது செய்யவில்லை என்ற காரணத்தினால் அரசாங்கத்துக்கான ஆதரவிலிருந்து விலகிக்கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி எமது கட்சி மட்டுமே. அன்று நாம் அவ்வாறு செய்யாதிருந்தால் இன்று நாமும் அரசாங்கத்தின் பின்னணியில் நடந்த அனைத்து பள்ளிவாசல் உடைப்புக்கும் பங்குதாரிகளாக இறைவன் முன்பு குற்றவாளிகளாக இருந்திருக்க வேண்டி வரும்.ஆனால், சுயநல ஏமாற்று அரசியலை ஒழித்து உண்மை, வாய்மை, நேர்மை என்ற இஸ்லாமிய அரசியலுக்கு வழி காட்டும் எமக்கு இறைவன் தந்த உதிப்பின் காரணமாக அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து வெளியேறியதோடு நிற்காமல் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரசுக்கு ஆதரவளிப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் இந்த அநியாயங்களின் பங்காளிகள் என்பதை உரக்கச் சொல்லி வருகிறோம்.தற்போது தம்புள்ளையிலிருந்த இந்து கோவில் தரை மட்டமாக்கப்பட்டிருப்பதன் மூலம் தம்புள்ளை பள்ளியும் இடிக்கப்படும் என்ற செய்தியை பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள். அதுவும் பொதுநலவாய மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் இதனைச் செய்துள்ளமை மூலம் எந்தளவிற்கு நாட்டுப்பற்றற்றவர்களாக இந்த இனவாதிகள் இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.இத்தகையதொரு சூழ்நிலையில் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் நாட்டுத் தலைவர்களிடம் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இத்தகைய பிரச்சினைகளை ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் எழுதப்பட்டு அவர்களுக்கு விளக்கம் கொடுக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும். அதிலும் முஸ்லிம்களின் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றவர்கள் என பேசும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறு நாம் சொல்வதன் மூலம் அக்கட்சியை இக்கட்டில் நாம் தள்ளிவிடவில்லை. மாறாக தேர்தல்களில் தனித்து நின்று தைரியமாக போட்டியிட முடியும் என்றால் ஏன் இத்தகைய சமூக விடயங்களில் முன்னின்று செயற்பட முடியாது என்றே கேட்கின்றோம்.
சிங்கள இனவாதிகள் நாட்டின் அபகீர்த்தியை கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் இந்த சூழ்நிலையில் கோவிலை இடிக்கிறார்கள் என்றால் நாமும் நமது நிலையைச் சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.
அதனை விடுத்து நவநீதம்பிள்ளை வந்து போனதும் அவரை கட்சி ரீதியாக சந்தித்து பேச முடியவில்லை என தமது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தி அறிக்கை விட்டது போல் இவற்றை செய்யாமல் பொதுநலவாய மாநாடு முடிந்ததும் ஏதாவது காரணத்தைக் கூறி அறிக்கை விட வேண்டாம் என அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்கும் சொல்லி வைக்கின்றோம் எனவும் கூறினார்.
0 Comments